Ravichandran Ashwin Tamil News: கடந்த ஆண்டு (ஜூலை முதல் செப்டம்பர் வரை) இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நாட்டிங்ஹாமில் நடந்த முதலாவது டெஸ்ட் ட்ரா ஆனது. தொடர்ந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஆனால், பின்னர் லீட்ஸ் நகரில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்டில், இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடக்கவிருந்த 5வது டெஸ்ட் போட்டி கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அணியின் பிசியோதெரபிஸ்ட் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் விளையாட விருப்பம் தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து, பிசிசிஐ மற்றும் இசிபி இணைந்து, 5 வது டெஸ்ட் போட்டியை அடுத்த ஆண்டில், அதாவது இந்தாண்டில் நடத்துவதாக அறிவித்தனர். இது தொடர்பாக அப்போது பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐந்தாவது டெஸ்ட் போட்டியை ரத்து செய்வது என்பது இசிபி உடனான கூட்டு முடிவு என்று தெரிவித்தார்.
"இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) இணைந்து மான்செஸ்டரில் திட்டமிடப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன. இந்த டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கான சுற்று விவாதங்கள் நடைபெற்றன. ஆனால், இந்திய அணியில் கொரோனா பரவியதால் ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்ட் போட்டியை ரத்து செய்யும் முடிவு எட்டும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐக்கும் இசிபிக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை மாற்றியமைக்க பிசிசிஐ முன்வந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை மாற்றுவதற்கான சாளரத்தை கண்டுபிடிப்பதில் இரு வாரியங்களும் செயல்படும்,” என்று பிசிசிஐ அப்போது வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்தியா - லீசெஸ்டர்ஷைர் அணிகள் (இங்கிலாந்தின் கிளப் அணி) 4 நாள் கொண்ட டெஸ்ட் பயிற்சி ஆட்டத்திலும், இந்தியா - நார்த்தாம்டன்ஷையர் (இங்கிலாந்தின் கிளப் அணி) அணிகள் டி-20 பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகின்றன.
Hello from Leicester and our training base for a week will be @leicsccc 🙌 #TeamIndia pic.twitter.com/MAX0fkQcuc
— BCCI (@BCCI) June 20, 2022
அஸ்வினுக்கு கொரோனா உறுதி…
5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று காலை முதல் தங்களது பயிற்சியை தொடங்கிய நிலையில், அந்த அணியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் இடம்பிடிக்கவில்லை. அவருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் தான் அவர் சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்துக்கு விமானத்தில் பயணப்படவில்லை. இந்த ஆட்டத்திற்கு அவர் சரியான நேரத்தில் அணியுடன் இணைவாரா? என்பது குறித்தும் தெளிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதிகளின்படி, அனைத்து வீரர்களும் அந்தந்த வீடுகளில் இருந்து ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அஸ்வினின் சோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதனால் அவர் தன்னை சென்னையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணியில் அஸ்வின் இடம்பெறவில்லை. இதனால் அவர், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) ஆண்டுதோறும் நடத்தும் முதல் தர விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருந்தார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஒரு வாரத்தில், அஸ்வின் உள்ளூர் அணியான மயிலாப்பூர் ரிக்ரியேஷன் கிளப் எம்ஆர்சி ‘ஏ’ அணிக்காக விளையாட முடிவு செய்தார். அவரது அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியை எட்டிய நிலையில், அந்த அணி முதல்முறை பட்டம் வெல்ல உதவினார் அஸ்வின். பின்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிளப் அணியில் தான் விளையாட வந்ததற்கான காரணத்தை தெரிவித்திருந்தார்.
"இந்த கேம்களை விளையாடுவதன் நோக்கம் 20 ஓவர்களில் இருந்து இந்த (சிவப்பு-பந்து) வடிவத்திற்கு மாற்றுவதாகும். இவை அனைத்தும் பணிச்சுமை மேலாண்மை. நீங்கள் வளர வளர, நீங்கள் புத்திசாலித்தனமாக விளையாடுவீர்கள். நான் அதை செய்ய முயற்சிக்கிறேன். நான் எனது விளையாட்டை ரசிக்கிறேன். நான் அங்கு (இங்கிலாந்து) சென்று அதை எப்படி வருகிறதோ அப்படியே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். பேட் மற்றும் பந்துவீச்சில் என்னால் சிறப்பாக பங்களிக்க முடியும் என உணர்கிறேன். எனது உடற்தகுதியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்," என்று கூறி இருந்தார்.
இந்தியா - இங்கிலாந்து டி-20 - ஒருநாள் தொடர் தேதிகள்…
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடரில் 2-1 என்கிற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. 5வது டெஸ்ட் போட்டியையும் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வசப்படுத்தும். இதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும்.
இதன்பிறகு, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 7 முதல் - ஜூலை 10ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து, இவ்விரு அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 12 முதல் - ஜூலை 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இவ்விரு தொடர்களுக்கான இந்திய அணி வருகிற ஜூன் 28ம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.