/indian-express-tamil/media/media_files/2025/08/20/ashwin-says-sanju-samson-place-under-threat-shubman-gill-vice-captain-tamil-news-2025-08-20-19-00-51.jpg)
ஆசிய கோப்பை இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடத்துக்கு ஆபத்து இருப்பதாக முன்னாள் இந்திய ஆஃப்-ஸ்பின்னரான தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு சாம்பியனான இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அணியில் சேர்க்கப்பட்டதாலும், துணை கேப்டனாகவும் இருப்பதாலும், ஆடும் லெவன் அணியில் கில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. சமீப காலமாக டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக டாப் ஆடரில் சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுவான தொடக்கத்தை கொடுத்து வந்தனர்.
ஆனால், ஆசிய கோப்பை இந்திய அணி கில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவரே தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு நிலவுகிறது. இதனால், சஞ்சு சாம்சன் அவருக்கான இடத்தை பிடிக்க கில்லுடன் போட்டியிடும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, சஞ்சு சாம்சன் இடத்துக்கு ஆபத்து இருப்பதாக முன்னாள் இந்திய ஆஃப்-ஸ்பின்னரான தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அஸ்வின் தனது ஆஷ் கி பாத் யூடியூப் சேனலில் பேசுகையில், "வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், நீங்கள் கில்லை துணை கேப்டனாக அறிவித்துள்ளீர்கள். எனவே சஞ்சு சாம்சனின் இடம் ஆபத்தில் உள்ளது. எனவே, சஞ்சு சாம்சன் விளையாடப் போவதில்லை. அவரது இடத்தில், தொடக்க வீரராக சுப்மான் கில் விளையாடுவார். உண்மையிலேயே, சுப்மான் கில்லின் தேர்வை நான் புரிந்துகொள்கிறேன். அவர் துணை கேப்டனாக இருக்கிறார். ஐ.பி.எல்-லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அவர் நிறைய ரன்கள் எடுத்துள்ளார். டி20 அணியில் தேர்வு செய்யப்பட அவருக்கு தகுதிகள் இருக்கிறது.
ஆனால், 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது என்பது கடிமான வேலை. அதனை நான் புரிந்துகொள்கிறேன். ஒருவரை ஒதுக்கி வைப்பது முதல் ஒரு வீரரை நீக்கிவிட்டதாகச் சொல்வது வரை, அது எளிதான காரியமல்ல. ஆனாலும், நீங்கள் வீரர்களிடம் பேச வேண்டும். அந்த சோகத்தை கடந்து செல்ல ஊக்குவிக்க வேண்டும். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, தேர்வு செய்யப்படாததற்கான காரணங்கள் அவர்களுக்குச் சொல்லப்படும் என்று நம்புகிறேன்.
2024 டி20 உலகக் கோப்பையில் மூன்றாவது தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருந்தார். அப்படிப்பட்ட ஒரு வீரரை உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில்லை சேர்த்து இருக்கிறார்கள். அதாவது, பரவாயில்லை, சுப்மனுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அதேநேரத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்காகவும் நான் மிகவும் வருத்துகிறேன். இந்த இரண்டு வீரர்களை கழற்றி விடுவது எந்த வகையிலும் நியாயமில்லை.
ஜெய்ஸ்வாலும் ஓரளவு நல்ல ஃபார்மில் இருந்திருக்கிறார். ஒருவேளை அவர்கள் சுப்மன் கில்லை எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக நினைத்துக்கொண்டிருக்கலாம். ஒருவேளை அவர் அனைத்து வடிவ அணிக்கும் கேப்டனாகவும் இருக்கலாம். ஆனால் அனைத்து வடிவங்களிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை, ”என்று அஸ்வின் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.