Ravichandran Ashwin | India vs England 3rd Test Rajkot: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 455 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் 131 ரன்களையும், ஜடேஜா 112 ரன்களையும், சர்ஃபராஸ் கான் 62 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகள், ரெஹன் அகமது 2 விக்கெட்டுகள், ஆண்டர்சன் , ஹார்ட்லி, ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இனிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 238 ரன்கள் பின்தங்கியுள்ளது. சதம் அடித்து மிரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 133 ரன்னுடனும், ரூட் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஸ்வின் திடீர் விலகல்
இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து மூத்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் திடீரென விலகியுள்ளார். குடும்ப மருத்துவ அவசர நிலை காரணமாக அவர் இப்போட்டியிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. மேலும் இந்த சவாலான நேரத்தில், கிரிக்கெட் வாரியமும், இந்திய அணியும் அஸ்வினுக்கு துணை நிற்கும் என்றும், பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
அஷ்வினுக்கு மாற்றாக வேறு வீரரை அணியில் சேர்க்கலாமா? - கிரிக்கெட் விதிகள் கூறுவது என்ன?
அஸ்வின் போட்டியில் இருந்து விலகியுள்ளதால் கடைசி 3 நாட்களில் 10 வீரர்கள் மற்றும் 1 மாற்று வீரருடன் இந்தியா விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த மாற்று வீரர் பந்துவீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது. வெறும் ஃபீல்டிங் மட்டும் தான் செய்ய முடியும். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், அஸ்வினுக்கு மாற்றாக வேறு வீரரை அணியில் சேர்க்க முடியும். ஸ்டோக்ஸ் மறுப்பு தெரிவித்தால், இந்தியாவின் 2வது இன்னிங்சில் 10 வீரர்கள் மட்டுமே பேட்டிங் முடியும். ஃபீல்டிங் செய்ய மட்டும் தான் மாற்று வீரரை களமிறக்க முடியும்.
ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக (சப்ஸ்டிட்யூட் ஃபீல்டர்) களத்தில் தேவ்தத் படிக்கல் களமிறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“