பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 முதல் தொடங்கி நடந்த ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆகஸ்ட் 11 வரை) நிறைவு பெற்றது. இந்த தொடரில் இந்தியா 1 வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் மட்டுமே வென்றது. அத்துடன் பதக்கப் பட்டியலில் 71வது இடத்தைப் பிடித்தது.
ஏமாற்றம்
இந்த ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீரர் - வீராங்கனைகள் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 2016ல் ரியோ ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி சிந்து 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றுடன் வெளியேறிய நிலையில், இந்த முறை2024 பாரிஸ் ஒலிம்பிக்கிலும் தகுதிச் சுற்றுடன் வெளியேறிய அதிர்ச்சி அளித்தார்.
இதேபோல், ஹெச்.எஸ் பிரணாய் ஆண்கள் ஒற்றையார் பிரிவிலும், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவிலும். தனிஷா கிராஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா ஜோடி பெண்கள் இரட்டையர் பிரிவிலும் தோல்வி அடைந்து இந்திய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இதில், ஆறுதல் தரும் விதமாக ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் லக்ஷ்யா சென் அரைஇறுதிப் போட்டி முன்னேறினார். அவரை டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன் வீழ்த்தினார். இருப்பினும், வெண்கலப் பதக்க ஆட்டத்தில் லக்ஷ்யா சென் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ ஏனோ தானோ என ஆடி கையில் இருந்த போட்டியை மலேசியாவின் லீ ஜி ஜியாவிடம் கோட்டை விட்டார். இதனால் கிடைக்க வேண்டிய வெண்கலப் பதக்கமும் கைநழுவிப் போனது.
விளாசல்
இந்தத் தோல்வியைக் கண்டு அதிர்ச்சியடைந்த லக்ஷ்யா சென்னின் பயிற்சியாளர் பிரகாஷ் படுகோனே, லக்ஷ்யா சென் உள்ளிட்ட பேட்மிண்டன் வீரர்களின் மோசமான செயல்பாடுகளை அவர்களை கடுமையாக விளாசி இருந்தார். இது பற்றி அவர் பேசுகையில், "1964 இல் மில்கா சிங், பின்னர் 1980 களில் பிடி உஷா ஆகியோர் நான்காவது இடத்தை பிடித்து பதக்கத்தை தவறவிட்டிருந்தனர். அதன் பின்பு இந்த முறை பல வீரர்கள் நான்காவது இடத்தை மட்டுமே பிடித்து தோல்வியடைந்து இருக்கிறார்கள். இப்போது வீரர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த ஒலிம்பிக் தொடர் மற்றும் இதற்கு முந்தைய ஒலிம்பிக் தொடர்களில் விளையாட்டு அமைப்புகள் மற்றும் அரசை நாம் எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. அவர்கள் இந்த மோசமான முடிவுகளுக்கு காரணம் அல்ல. வீரர்களே அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். விளையாட்டு அமைப்புகளும், அரசாங்கமும் என்ன தேவையோ அவை அனைத்தையும் அளித்து உள்ளன. இப்போது வீரர்கள் மீதுதான் அனைத்து பொறுப்பும் உள்ளது. எப்போது தேவையோ அப்போது அவர்கள் வெற்றி பெற்று கொடுக்க வேண்டும்.
இனியும் வீரர்கள் விளையாட்டு அமைப்புகளிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட பிசியோதெரபிஸ்ட் அளிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் பல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் வீரர்கள், "வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்கிறோமா? என்ற கேள்வியை கேட்க வேண்டும். அமெரிக்கா உட்பட எந்த நாடும் வீரர்களுக்கு இத்தகைய வசதிகளை செய்து கொடுக்கவில்லை." என்று அவர் கடுமையாக சாடி இருந்தார்.
பதிலடி
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "இதைப் பார்த்து ஏமாற்றமாக இருக்கிறது. ஒரு வீரர் வெற்றி பெற்றால், எல்லாரும் அவர் வெற்றியைக் கொண்டாட களத்தில் குதிப்பார்கள், தோற்றால் அது வீரரின் தவறா?
தயாரிப்பு இல்லாததற்கும், வீரரை தயார்படுத்துவதற்கும் பயிற்சியாளர்கள் ஏன் பொறுப்பேற்கவில்லை? அவர்கள்தான் வெற்றிகளுக்கு முதலில் பொறுப்பேற்கிறார்கள்; தங்கள் வீரர்களின் தோல்விகளுக்கும் ஏன் பொறுப்பேற்கக்கூடாது? நாளின் முடிவில், வெற்றி பெறுவதற்கு குழு முயற்சி தேவை, தோல்வியும் அணியின் பொறுப்பாகும், நீங்கள் திடீரென்று வீரரை பஸ்ஸுக்கு அடியில் தள்ளிவிட்டு, அந்த வீரர் மீது குற்றம் சுமத்த முடியாது." என்று கூறினார்.
ரூ.470 கோடி நிதி
இதற்கிடையில், மத்திய அரசின் விளையாட்டுத் துறை சார்பில் கொண்டுவரப்பட்ட டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) கீழ் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் பெற்ற பணம் குறித்து செய்திகள் வெளிவந்தன. அதன்படி, 2023 உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹெச்.எஸ் பிரணாய், அவரது ஒலிம்பிக் பயிற்சிக்காக ரூ.1.8 கோடி பெற்றார் என்றும், பெண்கள் இரட்டையர் பிரிவில் ஆடிய அஸ்வினி மற்றும் தனிஷா தலா ரூ.1.5 கோடி தங்களது ஒலிம்பிக் பயிற்சிக்காக பெற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், ஆண்கள் இரட்டையர் இரட்டையர் பிரிவில் ஆடிய சாத்விக்-சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருக்கு மத்திய அரசின் விளையாட்டுத் துறை சார்பில் மொத்தம் ரூ.5.62 கோடி செலவிட்டதாக கூறப்பட்டது. ஜெர்மனி மற்றும் பிரான்சில் சிந்து மற்றும் லக்ஷ்யா சென் பயிற்சிக்காக முறையே ரூ.26.60 லட்சம் மற்றும் ரூ.9.33 லட்சத்தை அரசு செலவிட்டதாகவும், பிவி சிந்து மொத்தமாக அரசாங்கத்திடம் இருந்து ரூ.3.13 கோடி பெற்றதாகவும் கூறப்பட்டது.
ஒட்டுமொத்தமாக, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மிஷன் ஒலிம்பிக் செல், பேட்மிண்டன் அணிக்காக மட்டும் ரூ.72.03 கோடியை ஒதுக்கியதாகவும், இதில் 16 துறைகளில் இந்தியாவின் ஒலிம்பிக் தயாரிப்புகளுக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.470 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி
இந்த நிலையில், இந்த அறிக்கைக்கு பதிலளித்துள்ள இந்திய பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா, தான் எந்தப் பணத்தையும் பெறவில்லை என்றும், இந்த அறிக்கையில் பொய்யான தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "உண்மைகளைச் சரி பார்க்காமல் அறிக்கை எப்படி எழுத முடியும்? எப்படி இந்தப் பொய்யை எழுத முடிகிறது? ஒவ்வொருவருக்கும் ரூ. 1.5 கோடியா வழங்கப்பட்டதா? யாரிடமிருந்து? எதற்காக? நான் இந்தப் பணத்தைப் பெறவில்லை. நிதிக்காக நான் எந்த நிறுவனத்திலோ அல்லது டாப்ஸ் நிறுவனத்திலோ அங்கம் கூட வகிக்கவில்லை." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.