Asia Cup 2018 Bangladesh vs Afghanistan : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் மஷ்ரபே மோர்டசா தலைமையிலான வங்கதேசம் அணியும், அஷ்கர் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும், ஏற்கனவே அடுத்த சுற்றான சூப்பர் 4க்கு முன்னேறிவிட்டன. அதே பிரிவில் இடம் பெற்றிருந்த இலங்கை, 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதனால், இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்விரு அணிகளும் இதுவரை ஐந்து முறை போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 2 முறை ஆப்கனும், 3 முறை வங்கமும் வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2016ல் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில், வங்கதேசம் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தது.
ஆசிய கோப்பையை பொறுத்தவரை, 2013-14ல் நடந்த தொடரில் ஆப்கானிஸ்தான் 32 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தானை பழி தீர்க்கும் எண்ணத்துடன் வங்கதேசம் களமிறங்கவுள்ளது.
இந்தப் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, இன்று மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. டிவி கவரேஜ் மாலை 4 மணிக்கு தொடங்க, 4.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
Star sports 1, Star sports 1 HD-ல் ஆங்கிலத்திலும், Star Sports 1 Tamil சேனலில் தமிழ் மொழியிலும், Star Sports 3 and Star Sports 3 HD சேனலில் ஹிந்தியிலும் போட்டியை நேரடியாக கண்டு களிக்கலாம்.
இணையதளத்தில் HotStar-ல் இப்போட்டியை நேரடியாக காணலாம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிலிலும் லைவ் ஸ்கோர் கார்டினை நீங்கள் கண்டுகளிக்கலாம்.