scorecardresearch

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: 6 அணிகளின் பலம், பலவீனம் என்ன?

6 teams strengths and weaknesses for Asia Cup 2022 Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில், 7 முறை கோப்பையை வென்ற இந்திய அணி அதிகமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

Asia Cup 2022: strengths and weaknesses of the 6 teams
Asia Cup 2022

Asia Cup 2022 Tamil News: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது பதிப்பு தீவு நாடான இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அங்கு நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி, இன்று முதல் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடர், பொதுவாக ஒருநாள் போட்டியாக நடத்தப்படும் நிலையில், வருகிற அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு, இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி 20 வடிவில் நடத்தப்படுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 7 முறை சாம்பியனான இந்தியாவுடன், பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், 5 முறை பட்டமும் வென்ற இலங்கையுடன், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் முதல் இரு இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ம் தேதி நடக்கிறது. இந்தத் தொடரின் ஆட்டங்கள் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்: 4 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்ஸ்… பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா 11 இதுதானா?

இலங்கை – ஆப்கான் அணிகள் மோதல்: பலம் – பலவீனம் என்ன?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், தொடக்க நாளான இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் அரங்கேறும் முதலாவது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தசன் ஷனக தலைமையிலான இலங்கை அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் குசல் மென்டிஸ், அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, ஹசங்கா உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

கேப்டன் தசன் ஷனக இன்று அளித்துள்ள பேட்டியில், “கடந்த சில மாதங்களாகவே நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். அது எங்களது சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்த உதவும். துபாய் இலங்கை போன்ற ஒரே மாதிரியான சீதோஷண நிலையைக் கொண்டது.” என்று தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ஆப்கானிஸ்தான் அணியை முகமது நபி வழிநடத்துகிறார். அந்த அணி ரஷித்கான், ஹஸ்ரத்துல்லா ஷசாய், ஜட்ரன் ஆகியோரைத் தான் மலை போல் நம்பியுள்ளது இவர்கள் ஜொலித்தால் தான் இலங்கைக்கு சவால் அளிக்க முடியும். மேலும், அந்த அணி எந்தவொரு அணியையும் சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளது. அணியின் சுழல் மன்னன் ரஷித் கான் வித்தை காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: IND vs PAK: கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார், யார்? இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?

8வது முறை கோப்பையை முத்தமிடுமா இந்தியா?

ஆசிய கோப்பை தொடரில் 7 முறை கோப்பை வென்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தற்போது 8வது முறையாக கோப்பையை முத்தமிட ஆயத்தமாகி வருகிறார்கள். கேப்டன் ரோகித் வழிநடத்தும் இந்திய அணியில் முன்னணி வீரர்களும், இளம் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அணியின் துணை கேப்டன் லோகேஷ் ராகுல், அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க வேண்டும். இதேபோல், ஃபார்ம் அவுட் என்கிற விமர்சனத்தை சுமந்து வரும் விராட் கோலி தனது ஃபார்மை மீட்டெடுக்க சரியான தருணம் கிடைத்துள்ளது. மேலும் 100வது டி-20 அடியெடுத்து வைக்கும் அவர் ரன் மழை பொழிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

மிடில்-ஆடரில் தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் அணிக்கு வலு சேர்க்கிறார்கள். ஃபினிஷராக ஜொலித்து வரும் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்ட்யா தரமான ஆட்டத்தை வெளிபடுத்தினால் இந்திய அணிக்கு ஈடு இல்லா பலம் கிடைக்கும். அஷ்வின், ஜடேஜா மற்றும் சாஹல் சுழலில் மிரட்டவும், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேசஷ் கான் போன்றார் வேகத்தாக்குதல் தொடுக்கவும் காத்திருக்கின்றனர்.

மொத்தத்தில் சம பலத்தோடு இருக்கும் இந்திய அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. கடந்த டி-20 உலக கோப்பையில், பாகிஸ்தானிடம் படு தோல்வியை சந்தித்த இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: இந்த ஓவர்களில் அதிரடி அவசியம்… ஆசியக் கோப்பையில் இந்தியா வியூகம் இதுதான்!

மிரட்டுமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, கடந்த 12 மாதங்களாக சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கோப்பை வென்ற அந்த அணி, இம்முறை கோப்பை முத்தமிட வலுவான அணியை கட்டமைத்துள்ளது. எனினும். பேட்டிங்கில் அந்த அணி, தொடக்க வீரர்களான முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசமை அதிகம் நம்பியுள்ளது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடாத நசீம் ஷா, ஹசன் அலியை அணியில் எடுத்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி அணியில் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

இதையும் படியுங்கள்: Ind vs Pak: எந்தெந்த வீரர்கள் இடையே மோதல் அனல் பறக்கும்?

பாயுமா வங்க தேச புலி?

வங்க தேச அணி அதன் புதிய கேப்டனான ஷகிப் அல் ஹசன் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்குப் பின், அந்த அணி சர்வதேச அரங்கில் தொடர்ந்து திணறி வருகிறது. அதிலிருந்து மீண்டு முக்கிய போட்டியாளராக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான இவர், வங்கதேச அணியின் போராடும் குணத்தை முன்னேற்றப் பாதையில்கொண்டு செல்வதில் முனைப்பு காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: பாகிஸ்தான் ஸ்டார் வீரரை வரிசையாக சந்தித்த இந்திய வீரர்கள்; பேசியது என்ன? சுவாரஸ்ய வீடியோ

ஆடுகளம் எப்படி?

ஐக்கிய அமீரக ஆடுகளங்கள் பொதுவாக சுழலுக்கு ஓரளவு கைகொடுக்கும். இங்கு பகலில் வெயில் வாட்டி வதைக்கும். இரவில் புழுக்கத்தில் வியர்த்து கொட்டும். இத்தகைய சூழலை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கனியும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Asia cup 2022 strengths and weaknesses of the 6 teams

Best of Express