Asia Cup Tamil News: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.
இத்தொடரில் கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் இடைநிறுத்தப்பட்டு 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், உலக மற்றும் ஆசிய கோப்பைகளுக்கான ஆட்டங்களில் மட்டுமே இந்த அணிகள் எதிர்கொள்கின்றனர். அவ்வகையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன.
இதுஒருபுறமிருக்க, தற்போது, ஆசிய கோப்பை போட்டிக்கான முந்தைய பதிப்புகளில் தலைப்புச் செய்திகளை உருவாக்கிய ஐந்து சர்ச்சைக்குரிய தருணங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
- கௌதம் கம்பீர் vs கம்ரன் அக்மல்
2010 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 268 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. பரபரப்பாக அரங்கேறிய ரன் சேஸிங்கின் போது, களத்தில் இருந்த தோனி-கம்பீர் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர். அப்போது, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் மற்றும் பாகிஸ்தான் அணியின் மூத்த கீப்பர்-பேட்டர் கம்ரான் அக்மல் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர்.
கம்பீர் அடித்த ஒரு பந்துக்கு விக்கெட் கீப்பர் அக்மல் கேட்ச்-பின் அப்பீல் செய்தார். ஆனால் அது நடுவார்களால் நிராகரிக்கப்பட்டது தொடர்ந்து ட்ரிங்க்ஸ் பிரேக்கில், கம்பீர் - அக்மலுக்கு இடையே போர் மூண்டது. இருவரும் ஒருவரையொருவர் முட்டி மோதிக்கொள்ளும் விதம் தென்பட்டனர். ஆனால் அதற்குள்ளாக நடுவர் இவர்களுக்கு இடையே நுழைந்தார். பின்னர், கம்பீர் அருகே விரைந்து வந்த தோனி, கம்பீரை தனியாக அழைத்துச் சென்று பதற்றத்தைத் தணித்து, மீண்டும் களமாட சொன்னார்.
இந்த மோதல் போக்கு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. விக்ரம் சாத்தயே உடனான ஒரு உரையாடலில் இந்த மோதலுக்கான முக்கிய முக்கிய காரணம் கேட்கப்பட்டது போது கம்பீர், “நான் அடித்த பந்தை முவதுமாக தவறவிட்டேன். பந்து மட்டையில் பட்டது என்று நினைக்கும் வகையில் அவர் அப்பீல் செய்தார். அப்போது நான் அவரிடம் அப்பீல் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை, ஏனென்றால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றேன். பிறகு, நாங்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டோம், அது பின்னர் அது மோசமாகிவிட்டது." என்று கூறியிருந்தார்.
- ஹர்பஜன் சிங் vs சோயிப் அக்தர்
கம்பீர் - அக்மல் மோதிக்கொண்ட அதே ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் - சோயிப் அக்தர் இடையேயும் வார்த்தைப் போர் மூண்டது. 268 ரன்கள் கொண்ட இந்திய அணியில் முன்னணி வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்த தருணத்தில், களத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா - ஹர்பஜன் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணிக்கு தேவையான ரன்களை சேர்த்து வந்தது.
அப்போது 47வது ஓவரை வீசிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அந்த ஓவரில் ஹர்பஜன் சிக்ஸரை பறக்கவிட்டு மிரட்டி இருந்தார். இதேபோல், அணிக்கு 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது ஒரு சிக்ஸரை அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் ஹர்பஜன். இதன்பிறகு அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக அக்தரை நோக்கி கர்ஜித்தார் ஹர்பஜன் சிங்.
பின்னர் ஹெலோ செயலியில் ஒரு வீடியோ நேர்காணலில் பேசிய அக்தர், தான் ஹர்பஜனுடன் மிகவும் கோபமாக இருந்ததாகவும், அவருடன் மீண்டும் சண்டை பிடிக்க, விளையாட்டுக்குப் பிறகு, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தான் சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
- தோனி-தஸ்கின் அகமது போட்டோஷாப் செய்யப்பட்ட படம்
2016 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, தோனியின் துண்டிக்கப்பட்ட தலையை வங்கதேசத்தின் டாஸ்கின் அகமது கையில் வைத்திருப்பது போன்ற மார்பிங் செய்யப்பட்ட படம் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு பெரும் புயலை உருவாக்கியது. முன்னதாக, இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோத முனைப்புடன் இருந்த வங்கதேச அணி பாகிஸ்தானை அரையிறுதியில் திக்குமுக்காட வைத்தது. இதனையடுத்து, இந்த மார்பிங் செய்யப்பட்ட படம் ட்விட்டரில் பதிவேற்றப்பட்டு வைரலாக்கப்பட்டது.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அப்போதைய இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த சம்பவம் குறித்து பதிலளித்து இருந்தார். “செய்தித்தாள்களைப் பார்ப்பது எங்கள் வேலை அல்ல. எங்கள் வேலை கிரிக்கெட் விளையாடுவது. தினசரி செய்தித்தாள்களில் என்னென்ன கதைகள் வெளியாகின்றன என்பதைக் கண்டுபிடிப்பது உங்கள் வேலை. நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது, செய்தித்தாள் கட்டுரைகளில் கவனம் செலுத்துவதில்லை. எனவே நீங்கள் அனைவரும் அந்தக் கதைகளைப் படிப்பதன் மூலம் உங்கள் சொந்த மதிப்பீடுகளைச் செய்யலாம்." என்று அவர் கூறியிருந்தார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இறுதிப் போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணி பங்களாதேஷை பந்தாடி இருந்தது.
- கேப்டன் கூல் தனது கூல் தன்மையை இழந்த தருணம்
வங்க தேசத்தில் நடந்த 2016 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியில் நடுவர்களின் சில முடிவுகள் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. அதில் ஒரு முடிவுக்காக கேப்டன் 'கூல்' எம்.எஸ். தோனி, தனது கூல் தன்மையை இழந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் ஆஷிஷ் நெஹ்ரா வீசிய பந்தை சரியாக க்ளோவ் செய்த பிறகும், பேட்ஸ்மேன் குர்ரம் மன்சூர் அவுட் இல்லை என நடுவர் தெரிவித்தார்.
தோனியிடம் கேட்ச் ஆவதற்கு முன் பந்து மன்சூரின் கையுறைகளில் பட்டதாக தொலைக்காட்சி மறு ஒளிபரப்புகள் தெரிவித்தன. இந்தியாவின் கடுமையான அப்பீல் நிராகரிக்கப்பட்டபோது, வெளிப்படையாக வருத்தப்பட்ட கேப்டன் எம்எஸ் தோனி, வங்கதேச நடுவர் ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்துடன் களத்தில் வாதாடினார். ஆட்டத்திற்குப் பிறகான பேட்டியில் பேசிய தோனி, நடுவர்கள் தங்கள் காதுகளில் மாட்டிக்கொண்டுள்ள இயர்பீஸ்கள் அவர்களின் ஆன்-பீல்டு கேட்கும் திறனையும், செயல்திறனைத் தடுக்கும் என்றும் கவலை தெரிவித்தார்.
- ஒரு ஓவரில் 17 பந்துகள் வீசிய பாக்.வீரர்...
2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டியில், பாகிஸ்தானின் முகமது சமி, பந்துவீச்சைத் துவக்கினார். அவர் ஒரு மெய்டன் ஓவருடன் தொடங்கிய நிலையில், அதைத் தொடர்ந்து ஒரு பயங்கரமான ஓவரை வீசி இருந்தார். அந்த ஓவரில் மட்டும் 17-பந்துகளை வீசினார். அதில் ஏழு வைடுகள் மற்றும் நான்கு நோ-பால்களும் உள்ளடங்கும்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.