Pakistan Cricket Board (PCB) - Asian Cricket Council (ACC), BCCI secretary Jay Shah Tamil News: 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அட்டவணைப்படி பாகிஸ்தானில் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிய கோப்பை போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என்றும், இரு நடுநிலையான இடத்தில் தொடர் நடைபெறும் என்றும் ஜெய் ஷா தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 91 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா, "2023 ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் நடைபெறும். இதை ஏசிசி (ACC) தலைவர் என்ற முறையில் சொல்கிறேன். நாங்கள் <இந்தியா> அங்கு <பாகிஸ்தானுக்கு> செல்ல முடியாது. அவர்கள் இங்கு வர முடியாது. கடந்த காலத்திலும், ஆசிய கோப்பை நடுநிலையான இடத்தில் விளையாடப்பட்டது." என்று கூறினார்.
மேலும் பேசிய ஜெய் ஷா, பாகிஸ்தானுடன் விளையாடும் விஷயத்தில், ஒரு கொள்கை உள்ளது என்றும், பிசிசிஐ அதை பின்பற்றும் என்றும் வலியுறுத்தினார். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ஷாவின் அருகில் அமர்ந்து, பாகிஸ்தானுடன் விளையாட வாரியத்திற்கு அரசாங்க அனுமதி தேவைப்படும் என்று விளக்கி இருந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதை அடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஏசிசி) அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஆண்டு ஆசிய கோப்பையை நடுநிலையான இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஏசிசி தலைவர் ஜெய் ஷா ஜெய் ஷா நேற்று தெரிவித்த கருத்துகளை ஆச்சரியத்துடனும், ஏமாற்றமும் அளிக்கிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வாரியம் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (போட்டியை நடத்தும் நாடு) ஆகியவற்றுடன் எந்த விவாதமும் அல்லது ஆலோசனையும் இல்லாமல், அவற்றின் நீண்டகால விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஏசிசி வாரிய உறுப்பினர்களின் அமோக ஆதரவு மற்றும் பதிலுடன் பாகிஸ்தானுக்கு ஏசிசி ஆசிய கோப்பை போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஏசிசி ஆசியா கோப்பையை வேறு இடத்திற்கு மாற்றும் ஷாவின் அறிக்கை ஒருதலைப்பட்சமாக உள்ளது.
இது செப்டம்பர் 1983ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்ட தத்துவம் மற்றும் ஸ்பிரிட்க்கு எதிரானது. அதன் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், ஆசியாவில் கிரிக்கெட் விளையாட்டை ஒழுங்கமைக்கவும், மேம்படுத்தவும் ஒரு ஐக்கிய ஆசிய கிரிக்கெட் அமைப்பு" என்று பிசிபி தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற அறிக்கைகளின் ஒட்டுமொத்த தாக்கம் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் சமூகங்களை பிளவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 2023 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2024-2031 சுழற்சியில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி நிகழ்வுகளுக்கு பாகிஸ்தானின் இந்தியா வருகையை பாதிக்கலாம்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் அறிக்கை குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் இருந்து இன்றுவரை அதிகாரப்பூர்வ தகவல் அல்லது விளக்கத்தை பெறவில்லை. எனவே, தற்போது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தனது வாரியத்தின் அவசர கூட்டத்தை நடைமுறையில் கூடிய விரைவில் கூட்ட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இந்திய அணி கடைசியாக 2005-06ல் தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் இருதரப்பு தொடருக்காக பாகிஸ்தானுக்கு சென்றது. இருப்பினும், 2008 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்தியா பாகிஸ்தான் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil