Jay Shah: இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏ.சி.சி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷா-வின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏ.சி.சி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள், அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரான ஷா, 2021 ஜனவரியில் முதல் முறையாக ஏ.சி.சி-யின் தலைவராக பொறுப்பேற்றார்.
இது தொடர்பாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜெய் ஷாவின் நீடிப்பு இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தலைவர் ஷம்மி சில்வாவினால் இரண்டாவது முறையாக முன்மொழியப்பட்டது மற்றும் ஏ.சி.சி-யின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக பரிந்துரைக்கப்பட்டது." என்று தெரிவித்துள்ளது.
“ஏ.சி.சி வாரியத்தின் தொடர்ச்சியான நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். விளையாட்டு இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும் பிராந்தியங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதன் முழு வளர்ச்சியை உறுதி செய்வதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஆசியா முழுவதும் கிரிக்கெட்டை வளர்ப்பதில் ஏசிசி உறுதிபூண்டுள்ளது” என்று ஜெய் ஷா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“