Asian Games 2018 Live Streaming Day 6: 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி இந்தோனேசியாவில் தொடங்கியது. செப்டம்பர் 2ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், தெற்கு சுமத்ரா தலை நகர் பாலேம்பங்கிலும் இப்போட்டிகள் நடைபெறுகிறது. இந்தத் தொடரில், 15,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், வங்கதேசம், பூட்டான், புரூனே, சீன தைபே, கிழக்கு தைமூர், ஹாங் காங், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், ஜோர்டான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, கிர்கிஸ்தான், லாவோஸ், லெபனான், மக்காவு, மாலத்தீவுகள், மங்கோலியா, மியான்மார், ஓமன், பாலஸ்தீனம், பிலிப்பைன்ஸ், கத்தார், சிரியா, தஜிகிஸ்தான், தாய்லாந்து, துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வியட்நாம், ஏமன் உள்ளிட்ட நாடுகள் இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் பங்கேற்றுள்ளன.
நீச்சல், வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, சைக்கிளிங், குதிரையேற்றம், வாள்வீச்சு, ஹாக்கி, கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
Asian Games 2018 Live Streaming Day 6 லைவ் அப்டேட்ஸ் இங்கே,
02.25 pm: இன்று நடந்த மகளிர் கபடி இறுதிப் போட்டியில், இந்தியாவும் - ஈரானும் மோதின. இதில், 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் வென்று தங்கப்பதக்கம் வென்றது. இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது.
01.00 pm: 10m ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
12.30 pm: ஆடவருக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. இதில், 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இந்திய இணை தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
இதன்மூலம், ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது.
11.00 am: நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் இறுதிப் போட்டிக்கு, இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் தகுதிப் பெற்றார். அவர் தகுதி சுற்றில் 27.95 வினாடியில் கடந்து 6-வது இடத்தை பிடித்து முன்னேறினார்.
ஆண்களுக்கான 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டி தகுதிச் சுற்றில், இந்திய வீரர் அத்வாய் பேஜ் 15 நிமிடம் 29.96 வினாடியில் கடந்தார். ஆனால் அது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போதுமானதாக இல்லை. அதனால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.
ஆண்கள் 4 x 100 மீட்டர் மெட்லே ரீளே பிரிவில் ஸ்ரீஹரிநட்ராஜ், சந்தீப் செஜ்வால், சாஜன் பிரகாஷ், டிசாசா ஆகியோரை கொண்ட இந்திய அணி (3.44.94) தகுதிச் சுற்றில் 9-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது.
10.00 am: 4 வீரர்கள் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. இந்திய அணியில் சவர்ன் சிங், டட்டு பொகனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் இணைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 6 நிமிடம் 17.13 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தனர். இந்தோனேசிய அணி வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து அணி வெண்கலப் பதக்கமும் வென்றது.
09.30 am: இன்று துடுப்பு படகு போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆண்களுக்கான இலகுரக துடுப்பு படகு ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். இவர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 7 நிமிடம் 18.76 வினாடிகளில் எட்டினார். இதேபோல் இலகுரக துடுப்பு படகு இரட்டையர் பிரிவில் ரோகித் குமார், பகவான் தாஸ் ஆகியோர் இணைந்து வெண்கலம் வென்றுள்ளனர்.