ரஹி சர்னோபட்... ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று ஒரே நாளில் தேசிய அளவில் கொண்டாடப்படும் வீராங்கனை ஆகியிருக்கிறார். யார் இந்த ரஹி சர்னோபட்?
ரஹி சர்னோபட் இன்று (ஆகஸ்ட் 22) 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4-வது நாளில் இந்தச் சாதனையை படைத்திருக்கிறார் ரஹி சர்னோபட்!
ஆசிய விளையாட்டுப் போட்டி LIVE UPDATES: துப்பாக்கி சுடுதலில் ரஹி சர்னோபட் தங்கம் வென்றார் To Read, Click Here
27 வயதான ரஹி சர்னோபட், மஹாராஷ்டிரா மாநிலம், கோல்ஹபூரை சேர்ந்தவர்! ஏற்கனவே காமன்வெல்த் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவர்!
2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியில் அடுத்தடுத்து இரு தங்கப் பதக்கம் வென்றார். 2014-ம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அதே சாதனையை தொடர்ந்தார்.
2008-ம் ஆண்டு புனேயில் இளையோர் காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்தியாவுக்காக அவர் வென்ற முதல் தங்கம் அது! 2014 ஆசியப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் குழுப் போட்டியில் அனிஷா சையத், ஹீனா சித்து ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுக் கொடுத்தார்.
உலகப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுக் கொடுத்தவரும் சர்னோபட்தான்! 2015-ல் சாங்க்வானில் நடைபெற்ற போட்டியில் அதை சாதித்தார். 2015 மே மாதம் தேசிய துப்பாக்கி சுடுதல் கழகம் மதிப்புமிக்க அர்ஜூனா விருதுக்கு ரஹி சர்னோபட் பெயரை பரிந்துரை செய்தது.
2016-ல் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓராண்டு முழுவதும் சர்னோபட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இதனால் அவரது ‘ரேங்க்’ சரிந்தது. ‘இந்த ஆட்டங்கள் எனக்கு மிக முக்கியமானவை. 2016-ம் ஆண்டு முழுக்க நான் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2017-ல் வெற்றியும் தோல்வியும் கலவையாக இருந்தது. 2018-லும் இரு உலகப் போட்டிகளில் ஒன்றில் 4-வது இடத்திலும், மற்றொன்றில் சராசரியான இடமுமே கிடைத்தன’ என ஆசியப் போட்டி தொடங்கும் முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் சர்னோபட்!
துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சர்னோபட்டுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.