Asian-games 2023: 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 13 தங்கம், 22 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
அரைஇறுதிக்கு முன்னேறிய இந்திய ஆக்கி அணி
இந்நிலையில், ஆக்கி ஆண்கள் முதல் நிலை குரூப் ஏ லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே இந்திய அணி அபாரமாக விளையாடி கோல் மழை பொழிந்தது. மேலும், கடைசி வரை வங்கதேச அணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் சிறப்பாக விளையாடியது. ஆட்ட நேர முடிவில் 12-0 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை பந்தாடி வெற்றியை ருசித்தது இந்தியா. மேலும் இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.
வெண்கலம் வென்ற டேபிள் டென்னிஸ் அணி
டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதி சுற்றில் இந்தியா - தென் கொரியா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 4-3 என்ற செ ட் கணக்கில் இந்திய இணை சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜிவை வீழ்த்தி தென்கொரிய இணை அபார வெற்றி பெற்றது. அரையிறுதியில் தோல்வியடைந்தபோதும் இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஒரே போட்டியில் 2 பதக்கம்
3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடங்களில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடங்களில் இலக்கை எட்டி வெ ண்கலம் வென்றார்.
நீளம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்
பெண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் ஆன்சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம்
கலப்பு அணி 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் எம்டி அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“