Asian-games 2023 | indian-cricket-team | Ruturaj-gaikwad: சீனாவின் ஹாங்சோ நகரில் 9-வது ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை முதல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மங்கோலியா, ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, ஹாங்காங், தாய்லாந்து, ஆப்கானிஸ்தான் என மொத்தம் 14 அணிகள் களமாடியுள்ளன. இதில் 9 அணிகளை ஏ, பி, சி என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ - பிரிவில் நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா அணிகளும், பி - பிரிவில் கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் அணிகளும், சி - பிரிவில் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. மீதமுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
தற்போது லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஏ, பி, சி பிரிவுகளில் இருந்து 4 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகளில் ஏற்கனவே கால்இறுதிக்கு தகுதி பெற்ற 5 அணிகளுடன் மோதும். அவ்வகையில், நாளை (அக்டோபர் 3ம் தேதி) முதல் நடக்கும் கால்இறுதிப் போட்டியில் இந்த 8 அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. வெற்றியை ருசிக்கும் அணி நேரடியாக அரைஇறுதிக்கு முன்னேறும். 2 அரைஇறுதிப் போட்டிகளும் அக்டோபர் 6ம் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 7ம் தேதியும் நடக்கிறது.
இந்தியா - நேபாளம் அணிகள் மோதல்
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை நடக்கும் முதலாவது கால்இறுதிப் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி ரோஹித் பவுடல் தலைமையிலான நேபாளம் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஹாங்சோ நகரின் பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியானது காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதும் 2வது கால்இறுதிப் போட்டி இன்று காலை 11. 30 மணிக்கு நடக்கிறது. இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2வது கால்இறுதிப் போட்டி நாளை புதன்கிழமை காலை 6:30 மணிக்கும், வங்கதேசம் - மலேசியா அணிகள் மோதும் 4வது கால்இறுதிப் போட்டி புதன்கிழமை காலை 11. 30 மணிக்கும் நடக்க உள்ளது.
ஆசிய போட்டி கிராமத்துக்கு சென்ற இந்திய அணி
இந்நிலையில், ஹாங்சோவில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆசிய விளையாட்டு கிராமத்திற்குச் சென்று இந்திய போட்டியாளர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். இந்திய வீரர்களைச் சந்தித்ததன் மூலம், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் அர்த்தம் என்ன என்பதையும், மகளிர் அணியைப் போலவே தங்கப் பதக்கத்தை வெல்வதில் அணி எவ்வாறு அதிக கவனம் செலுத்தியது என்பதையும் புரிந்துகொண்டதாக இந்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
இதுகுறித்து கேப்டன் ருதுராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கிரிக்கெட்டில் உலகக் கோப்பை, ஐ.பி.எல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் உள்ளன. அப்படிப்பட்ட சூழலுக்கும் சூழ்நிலைக்கும் நாம் பழகிவிட்டோம். ஆனால் இங்கு வந்து ஆசிய போட்டி கிராமத்திற்குச் சென்றபோது, விளையாட்டு வீரர்களைப் பற்றியும், அவர்கள் என்ன வகையான போராட்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பற்றியும் நாங்கள் உண்மையில் அறிந்தோம்.
2-3 வருடங்கள் அல்லது நான்கு வருடங்கள், அவர்கள் நாட்டிற்காக விளையாடுவதற்கும், பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் வாய்ப்பு பெறுவது அரிது. ஆசிய போட்டி கிராமத்திற்கு வந்தபோது நாங்கள் மிகவும் பெருமையடைந்தோம். மேலும் இது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம். அது வெளிப்படையாக எங்களுக்குத் தெரியும். ஆனால் அது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இன்னும் கொஞ்சம் பிரதிபலித்தது.
பேட்மிண்டன், டென்னிஸ் அல்லது ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளில் நம் நாடு விளையாடுவதைப் பார்க்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. இது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. நமது அணியை உற்சாகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது இந்த வீரர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய வாய்ப்பு மற்றும் பெருமைக்குரிய விஷயம். இந்த போட்டியை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு வருவதால், நாட்டிற்காக தங்கம் வென்று மேடையில் நிற்க அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.”என்று அவர் கூறினார்.
கடந்த இரண்டு நாட்களில், இந்திய கிரிக்கெட் அணி ஹாக்கி மற்றும் பேட்மிண்டன் அணிக்காக ஆதரவு கொடுத்தனர். மேலும் இந்திய வீரர்கள் மற்ற விளையாட்டு வீரர்களை விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்ததாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.