Asian-games 2023 | china | india: 9-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 2-வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா 5 பதக்கங்களை வென்றது.
பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
முதல் தங்கத்தை வென்ற இந்தியா
ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் மற்றும் திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆகியோர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் குழுப் போட்டியின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தனர். இதன்மூலம், இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. தற்போதைய உலக சாம்பியனான பாட்டீல், தகுதிப் போட்டியில் முன்னணியில் இருந்தார், அதைத் தொடர்ந்து தோமர் மற்றும் பன்வார் ஆகிய மூன்று இந்தியர்களும் முதல் 8 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ருத்ராங்க்ஷ் பாலாசாஹேப் பாட்டீல் போட்டி முழுவதும் 632.5 புள்ளிகளுடன் சீரான நிலையில் இருந்தார். அதே சமயம் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 631.6 புள்ளிகளைப் பதிவுசெய்து தொடரை தொடர்ந்து போட்டியிட்டார். இந்திய அணி மொத்தமாக 1893.7 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்ததை உறுதிசெய்ய திவ்யான்ஷ் சிங் பன்வார் சிறப்பாக செயல்பட்டார். இதன்மூலம் சீனாவின் தற்போதைய உலக சாதனையான 1893.3 புள்ளிகளை முறியடித்தனர். இரண்டாவது இடத்தைப் பிடித்த கொரியா வெள்ளியையும், ஈரான் வெண்கலத்தையும் கைப்பற்றியது.
தொடக்க நாளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி வெள்ளி மற்றும் ரமிதா ஜிண்டாலின் தனிப்பட்ட வெண்கலத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சுடலில் இந்தியா பெற்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும்.
ஆங்கிலத்தில் படிக்க:- Asian Games 2023: Men’s air rifle shooting team wins India’s first gold of Hangzhou 2023
வெண்கலம்: ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் இறுதிப் போட்டியில், இரு இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு இடையேயான வெண்கலப் பதக்கத்துக்கான நேருக்கு நேர் போரில் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க் பாட்டீலை வீழ்த்தினார். இதன் மூலம் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் வெண்கலம் பதக்கம் வென்றார்.
வெண்கலம்: ஆடவர் 4 இறுதிப் போட்டியில் இந்தியா மேலும் ஒரு பதக்கத்தை வென்றது. ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
வெண்கலம்: ஆடவர் குவாட்ரூபிள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இந்தப் பிரிவில் 2018ல் இந்தியா தங்கம் வென்று இருந்தது.
துடுப்பு படகு பிரிவில் இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆடவர் லைட் வெயிட் பிரிவு டபுள் ஸ்கல்ஸ் - வெள்ளி பதக்கம்
ஆடவர் காக்ஸ்டு எயிட் - வெள்ளி பதக்கம்
ஆடவர் காக்ஸ்லெஸ் ஃபோர் - வெண்கலம்
ஆடவர் காக்ஸ்லெஸ் பையர் - வெண்கலம்
ஆடவர் குவாட்ரூபிள் ஸ்கல்ஸ் - வெண்கலம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“