Hangzhou Asian Games 2023 in China Tamil News: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் வருகிற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் அனைத்து விளையாட்டு அணிகளும் பதிவு செய்தன. ஆனால், பதிவு செய்யாத ஒரே விளையாட்டு அணியாக இந்திய கிரிக்கெட் அணி இருந்தது. இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்தபோதிலும், இந்திய கிரிக்கெட் அணியை ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அனுப்புவதில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.
இருப்பினும், தொடர்ச்சியான கோரிக்கைகள் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியை அனுப்புவது குறித்து பிசிசிஐ மறுபரிசீலனை செய்தது. இதன்படி, இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளை களமிறக்குகிறது. மேலும், ஜூன் 30ம் தேதிக்குள்ளாக இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு வீரர்களின் பட்டியலை அனுப்பும் என்றும், டி20 ஃபார்மெட்டில் விளையாடப்படும் இந்த போட்டிக்கு 2-ம் தர இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ அனுப்பும் என்றும் ஏற்கனவே நமது 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் செய்தி வெளியிப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆசிய போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லட்சுமணனையும் பிசிசிஐ நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இதுகுறித்து இன்னும் முடிவு இறுதி செய்யப்படவில்லை என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய விளையாட்டுகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) கீழ் வராது மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அங்கீகரிக்கப்படவில்லை. தவிர, ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதிகளில் ஆசிய போட்டிகள் நடக்கிறது. எனவே, முக்கிய வீரர்கள் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாடும். அதனால், 2-ம் தர இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ அனுப்ப உள்ளது.
இந்திய அணியின் வீரர்கள் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களுக்கு தயாராவதால் முன்னணி மற்றும் முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. இந்த போட்டி டி20 ஃபார்மெட்டில் ஆடப்பட இருப்பதால், ஐபிஎல் 2023 தொடரில் ஜொலித்த திலக் வர்மா, சாய் சுதர்சன் மற்றும் ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் தங்கள் முதல் அழைப்பைப் பெறலாம். மேலும், மூத்த மற்றும் இளம் பந்து வீச்சாளர்கள் இடம் பெறலாம்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17, வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 23 வரை இந்தியாவில் நடக்கிறது என்பது குறிப்பித்தக்கது.
பெண்கள் அணியைப் பொறுத்தவரை, முழு பலத்துடன் களமிறங்குவார்கள். ஹர்மன்ப்ரீத் கவுரின் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் வங்கதேசம் செல்லவுள்ளது. அதன்பிறகு, அவர்கள் ஓய்வில் தான் இருப்பார்கள். வரவிருக்கும் புதிய தலைமை பயிற்சியாளர் முதல் பணி ஆசிய விளையாட்டுப் போட்டியாக இருக்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.