Asian Games 2023 Tamil News: 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஹாக்கி விளையாட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி அடுத்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆசிய விளையாட்டுக்கான இந்திய ஹாக்கி அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. 18 பேர் கொண்ட ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக ஹர்திக் சிங்கும் தொடருகிறார்கள். கடந்த மாதம் தொடக்கத்தில் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த தமிழக வீரரான எஸ்.கார்த்தி, ஆகாஷ்தீப் சிங், ஜூக்ராஜ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சீனியர் வீரர் லலித் உபாத்யாய் அணிக்கு திரும்பியுள்ளர். சஞ்சய், அபிஷேக் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஒரே தமிழக வீரரான கார்த்தி, அந்த தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த நிலையில், தமிழக வீரரான கார்த்தி திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நீக்கம் தொடர்பாக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
12 அணி - 2 பிரிவு
ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியன் ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், உஸ்பெகிஸ்தான், சிங்கப்பூர் ஆகியவை அந்த பிரிவில் இடம் பிடித்துள்ள எஞ்சிய அணிகளாகும். இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை (வருகிற 24-ந் தேதி) சந்திக்கிறது.
ஆசிய போட்டிக்கான இந்திய ஆண்கள் அணி:
ஸ்ரீஜேஷ், கிரிஷன் பதாக், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், சுமித், நீலகண்ட ஷர்மா, ஹர்திக் சிங் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷாம்ஷெர் சிங், அபிஷேக், குர்ஜந்த் சிங், மன்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“