Asif Ali Tamil News: ஆசிய கோப்பை டி20 போட்டிகள் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 27 ஆம் தேதி)முதல் தொடங்குகிறது. 6 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரங்கேறுகின்றன. தற்போதைய ஃபார்ம் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முட்டி மோதிக்கொள்ளும் அணிகளாக உள்ளன. கிரிக்கெட்டில் பரம எதிரிகளான இந்த அணிகள் குரூப் ஏ-ல் இடம்பிடித்துள்ளன. இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தும் ஆட்டம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடக்கிறது.
கடந்தாண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியைச் சந்தித்து இருந்து. அதன்பிறகு மோதும் முதல் ஆட்டமாக இந்த ஆட்டம் இருப்பதால் இருநாட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இந்த தொடக்க ஆட்டத்திற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களை அசைத்துப் பார்க்கும் இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் இடம்பெறாமல் போனது அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான ரன்களை எடுக்க பாகிஸ்தான் அதன் இரண்டு டாப்-ஆர்டர் பேட்டர்களை பெரிதும் நம்பியிருந்தாலும், மிடில் ஆர்டரில் ஆட இருக்கிற சில வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
அவ்வகையில், பாகிஸ்தான் அணியில் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆசிப் அலி உள்ளார். அதிரடி ஷாட்களை பறக்கவிடுவதற்கு புகழ் பெற்ற இவர், ஆசிய கோப்பை போட்டிக்கான தனது தயாரிப்புகளைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அதன்படி, 30 வயதான ஆசிப் அலி தினமும் 100 முதல் 150 சிக்ஸர்கள் வரை பறக்கவிட்டு பயிற்சி மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
"சராசரியாக 10 ரன்களுக்கு மேல் தேவைப்படும் நிலையில் நான் பேட்டிங் செய்கிறேன். அதற்கு, நீங்கள் பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும், அதற்கு நிறைய பயிற்சி தேவை. நான் வழக்கமாக தினமும் 100-150 சிக்சர்களை அடிப்பேன். அதனால் போட்டியில் என்னால் 4 முதல் 5 சிக்ஸர்கள் வரை அடிக்க முடியும்" என்று அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை டி20 போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். 22 வயதான அவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நான்கு முதல் ஆறு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அவர் பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்காததது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.