அசாம் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், உள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடரான, நூருதின் அஹ்மது டிராபி தொடரில், அசாம் கிரிக்கெட் வீரர் அர்பன் தத்தா, ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி, அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். நேற்று(ஜூன்.13) நடந்த ஆட்டத்தில் கரைடியோ(Charaideo) அணிக்கு எதிராக, 19 ஓவர்கள் வீசி, நான்கு மெய்டன்களுடன் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார், இந்த 25 வயதான இடது கை ஸ்பின்னர் அர்பன் தத்தா.
இவரது அட்டகாசமான பவுலிங் மூலம், எதிரணி 49 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டி டிராவானாலும், அர்பன் தத்தாவின் சிவசாகர் அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதை கணக்கில் கொள்ளப்பட்டு, புள்ளிகள் வழங்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில், சிவசாகர் அணி 53.4 ஓவரில் 215 ரன்கள் எடுத்திருந்தது.
மேலும் படிக்க - Ind vs NZ: போட்டி கைவிடப்பட்டாலும் இந்தியாவுக்கு சாதகமே! நியூஸி., – இந்தியா ‘மழைத் தூறல்கள்’ ஒரு பார்வை!
மிரட்டலான ஸ்பெல் வீசிய அர்பனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் அசாமில் நடத்தப்படும் பல கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகிறார். .
எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்ற வேண்டுமென்பது நிச்சயம் ஒவ்வொரு பவுலரின் கனவாகும். ஜிம் லேகர் மற்றும் அணில் கும்ப்ளே மட்டுமே சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர்.
தவிர, தேபாஷிஷ் மொஹந்தி, சுபாஷ் குப்தே, பிரதீப் சுந்தராம் மற்றும் பிஎம் சாட்டார்ஜி ஆகிய வீரர்கள், இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் இச்சாதனையை படைத்துள்ளனர். கடந்த வருடம், மணிப்பூரைச் சேர்ந்த இளம் வீரர் ரெக்ஸ் சிங், அண்டர் 19 கூச் பெஹர் டிராபி தொடரில், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.