ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800மீட்டர் ஓட்டபந்தய பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தியதாகவும், அது முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலிடம் வந்து தங்கப் பதக்கம் வென்றார். 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 2.70 விநாடிகள் நேரத்தில் வந்து முதலிடம் பிடித்திருந்தார். தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவை, தமிழகத்தில் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றில், ‘தோஹாவில் ஆசிய தடகளப் போட்டி நடந்த சமயத்தில் கோமதி மாரிமுத்துவிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் மாதிரியில் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளார் என்று நிருபனம் ஆகியுள்ளது. ஊக்க மருந்து தொடர்பாக மேற்கொள்ளபட்ட ‘ஏ’ சோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ’பி’ சோதனையிலும் பாசிட்டிவ் என்று வரும் நிலையில் கோமதிக்கு 4 வருட காலம் தடை விதிக்கப்படும். அவர் வாங்கிய தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்படும். போலந்திலில் இந்திய தடகள வீராங்கனைகளுடன் கோமதி பயிற்சி பெறுவதாக இருந்தது. அது தடை செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இதுகுறித்து இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்வேல் சுமாரிவல்லா அதிகாரபூர்வ தகவல் எதுவும் தனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். தன்மீதான ஊக்கமருந்து குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து, 'இந்த குற்றச்சாட்டை நான் பத்திரிகைகளில் தான் பார்த்தேன். இதுகுறித்து நான் எதுவும் கேள்விப்படவில்லை. என் வாழ்க்கையில் நான் இதுவரை ஒருமுறை கூட ஊக்கமருந்தை பயன்படுத்தியதே இல்லை. போட்டிக்கு முன்னர் நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே அருந்தினேன். ஊக்கமருந்து சோதனையில் நான் தோல்வி அடைந்ததாக வெளிவந்த செய்தி தவறு' என்று கூறியுள்ளார்.
மேலும் கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி இதுகுறித்து கூறியபோது, 'கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என்றும், இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.