கடந்த சில மாதங்களாக டெல்லி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தியாகராஜ் மைதானத்திலிருந்து வீரர்களும், பயிற்சியாளர்களும் இரவு 7 மணிக்கே கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தது. அவர்களது கூற்றுப்படி, மைதானத்தில் இருந்து அனைவரையும் வெளியேறியபிறகு, டெல்லியின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) சஞ்சீவ் கிர்வார், தனது நாயுடன் இரவு 7.30 மணியளவில் வாக்கிங் வருவதாக குற்றச்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், நாங்கள் எப்போதும் இரவு 8 முதல் 8.30 மணிவரை, லைட் வெளிச்சத்தில் பயிற்சி செய்வோம். ஆனால், தற்போது 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேற வற்புறுத்தப்படுகிறோம். அதன்பிறகு, அதிகாரி ஒருவர் அவரது நாயுடன் வாக்கிங் செல்கிறார். எங்களது அன்றாட பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி கிர்வாரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானது. சில நேரங்களில் தனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வேன். ஆனால், வீரர்களின் பயிற்சிக்கு ஒருபோதும் இடையூராக இருந்தது இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
உண்மையை கண்டறிய எங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவினர் கடந்த ஏழு நாட்களில் மூன்று நாள்கள் மைதானத்திற்கு சென்று பார்வையிட்டோம். அப்போது, சரியாக மாலை 6.30 ஆனதும், மைதானம் பாதுகாவலர்கள் விசில் அடித்துக்கொண்டு வீரர்களை வெளியேற அறிவுறுத்துகின்றனர். 7 மணியளவில் மொத்த மைதானமும் காலியாகிவிடுவது தெரியவந்தது.
இந்த மைதானம், 2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்டது. இங்கு, தேசிய மற்றும் மாநில விளையாட்டு வீரர்கள் மற்றும் கால்பந்து வீரர்களை ஈர்க்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்டேடியம் நிர்வாகி அஜித் சவுத்ரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது, “மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள 4 மணி முதல் 6 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை கருத்தில் கொண்டு, இரவு 7 மணி வரை பயிற்சி செய்திட வீரர்களை அனுமதிக்கிறோம்” என்றார். ஆனால் அவர், பயிற்சி நேரம் தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையும் நம்முடன் பகிர்ந்துகொள்ளவில்லை.
தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரி நடைபயிற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் 7 மணிக்கு மைதானத்தின் கேட்டை மூட வேண்டும். அரசு அலுவலக செயல்படும் நேரத்தை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் காணலாம். இதுவும் டெல்லி அரசின் கீழ் உள்ள அரசு அலுவலகமாகும். அதிகாரி ஒருவர், நாயுடன் வாக்கிங் செல்வது குறித்து எனக்கு தெரியாது. நான் 7 மணிக்கே மைதானத்தை விட்டு கிளம்பிவிடுவேன்” என்றார்.
செவ்வாயன்று மைதானத்திற்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுவினர் சென்ற போது, இரவு 7.30 மணியளவில் மைதான காவலர்கள் முன்னிலையில் டிராக் மற்றும் கால்பந்து மைதானத்தில் நாய் ஒன்று சுற்றித் திரிவதைக் காண முடிந்தது
கிர்வார் கூறுகையில், “மைதானத்தை விட்டு விளையாட்டு வீரர்களை வெளியேறுமாறு நான் ஒருபோதும் கூறியது கிடையாது. மைதானம் மூடப்படும் நேரம் சமயத்தில் தான், நான் செல்வேன். செல்லப்பிராணியை ட்ராக்கில் விடமாட்டேன். ஒருவேளை மைதானம் காலியாக இருந்தால் மட்டுமே, செல்லப்பிராணியை விட்டுவிடுவோம். இதனால், எவ்வித விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.
பயிற்சி பெறும் வீரரின் பெற்றோர் கூறுகையில், “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது குழந்தையின் பயிற்சி பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் தான் மைதானத்தை உபயோகிப்பதாக நீங்கள் கூறினாலும், நாய் நடப்பதற்கு அரசுக்கு சொந்தமான மைதானத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியுமா? இது அதிகாரத்தை துஷ்பிரயோக செயல்” என தெரிவித்தார்.
பயிற்சியாளர்களும் விளையாட்டு வீரர்களும் கூறுகையில், 7 மணிக்கே வெளியேற்றப்படுவதால் வெயிலில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.
பல விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியை 3 கிமீ தொலைவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றியுள்ளதாகக் கூறினர்
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் பயிற்சியாளர் கூறுகையில், “இங்கு இரவு 8.30 மணி வரை விளக்குகளின் கீழ் பயிற்சி செய்கிறார்கள். மெயின் ஸ்டேடியத்தின் புதுப்பிக்கும் பணி முடியாததால், கோடை விடுமுறைகள் அதிக மாணவர்கள் பயிற்சி ஈடுபட வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil