ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், தரவரிசையில் டாப்-8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த சீசனுக்கான 48-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடக்கிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே மற்றும் 5 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் காயத்தால் சில மாதங்களாக ஒதுங்கி இருப்பதால் இந்த போட்டிக்கு தகுதி பெறவில்லை. சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா தகுதி பெற்ற போதிலும் காயத்தால் விலக நேரிட்டது.
களம் காணும் 8 வீரர்கள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்படி ‘போரிஸ் பெக்கர்’ அணிப்பிரிவில் 2-ம் நிலை வீரர் ரோஜர் ஃபெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும், ‘பீட் சாம்ப்ராஸ்’ அணிப்பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
15-வது முறையாக கவுரவமிக்க இந்த போட்டியில் கால்பதிக்கும் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஏற்கனவே இந்த பட்டத்தை 6 முறை வென்று சாதனை படைத்து இருக்கிறார். இந்த சீசனில் 53 ஆட்டங்களில் விளையாடி அதில் 49-ல் வெற்றி கண்டிருக்கிறார். அதில் அவரது பிரதான எதிரி நடாலை 4 முறை வீழ்த்தியதும் அடங்கும்.
சூப்பர் பார்மில் இருப்பதால் பெடரருக்கு பட்டம் வெல்ல நல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ஃபெடரர் கூறுகையில், ‘கடந்த ஆண்டு இந்த போட்டிக்கு நான் தகுதி பெறவில்லை. ஆனால் மீண்டும் இங்கு விளையாடி எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று உற்சாகமுடன் கூறினார்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்கே ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.1¼ கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக ரூ.1¼ கோடி கிடைக்கும். சாம்பியன் பட்டத்திற்குரிய பரிசுத்தொகை ரூ.11½ கோடி. ஆக தோல்வியே சந்திக்காமல் ஒரு வீரர் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் அவருக்கு மொத்தம் ரூ.16½ கோடி பரிசாக கிட்டும். அத்துடன் 1,500 வரை தரவரிசை புள்ளிகளையும் அள்ளலாம்.
இன்றைய தொடக்க நாளில் பெடரர், ஜாக் சோக்கை (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்வெரேவ்- மரின் சிலிச் மோதுகிறார்கள்.
இதே போல் இரட்டையர் பிரிவிலும் டாப்-8 ஜோடிகள் களம் இறங்குகின்றன. இதற்கு இந்திய தரப்பில் எந்த ஜோடியும் தகுதி பெறவில்லை.
சோனி இஎஸ்பிஎன், சோனி இஎஸ்பிஎன் ஹெச்டி சேனல்களில் இப்போட்டிகளை கண்டுகளிக்கலாம். மேலும், சோனிலைவ் ஆப் மற்றும் வெப்சைட்டிலும் போட்டிகளை காணலாம்.