/indian-express-tamil/media/media_files/2025/02/22/8yqbiPITJo4NF1x95PMD.jpg)
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி 2025, லைவ் கிரிக்கெட் ஸ்கோர்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia vs England LIVE Cricket Score, Champions Trophy 2025
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் - இங்கிலாந்து முதலில் பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் - பென் டக்கெட் களமாடியனர். இதில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை துரத்திய பிலிப் சால்ட் 10 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் 15 ரன்னுக்கு அவுட் ஆனார்.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இவர்களது நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தில் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. இந்த ஜோடியில் 78 பந்துகளில் 4 பவுண்டரியை விரட்டிய ஜோ ரூட் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின் வந்த ஹாரி புரூக் 3 ரன்னுக்கும், அடுத்து வந்த கேப்டன் பட்லர் 23 ரன்னுக்கும் அவுட் ஆகி வெளியேறினர். இதேபோல், லியாம் லிவிங்ஸ்டோன் 14 ரன்னுக்கு அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் அணியின் ஸ்கோரை உயர்த்த அதிரடியாக ஆடி வந்தார் தொடக்க வீரர் பென் டக்கெட் சதம் அடித்து அசத்திய அவர் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 165 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்னுடனும், அடில் ரஷித் ஒரு ரன்னுடனும் களத்தில் இருக்க, 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பென் ட்வார்ஷூயிஸ் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா பேட்டிங்
தற்போது ஆஸ்திரேலிய அணி 352 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட் - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த வந்த ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னுக்கு அவுட் ஆனார்.
தற்போது களத்தில் மேத்யூ ஷார்ட் - மார்னஸ் லாபுஷாக்னே ஜோடி ஆடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில், மேத்யூ ஷார்ட் 58 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி 58 ரன்கள் சேர்த்துள்ளார். இதேபோல், மார்னஸ் லாபுஷாக்னே 39 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் அதில் ரஷிதின் பந்து வீச்சில், மார்னஸ் லாபுஷாக்னே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது, 45 பந்துகளில் 47 ரன்களை அவர் அடித்திருந்தார். மறுபுறம், நிதானமாக ஆடிய மேத்யூ ஷார்ட்டின் விக்கெட்டை லியம் லிவிங்க்ஸ்டன் வீழ்த்தினார். அதன்படி, 63 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, ஜோஸ் இங்கிலீஸ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி அணியின் ரன்களை கணிசமாக உயர்த்தினர். ஒரு புறம் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் பறக்கவிட்ட ஜோஸ் இங்கிலீஸ், 77 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். மறுபுறம், அலெக்ஸ் கேரியும் தனது பங்கிற்கு 69 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர், ஜோஸ் இங்கிலீஸுடன் மாக்ஸ்வெல் கைகோர்த்தார். தனது அதிரடி ஆட்டத்தை இறுதிவரை வெளிப்படுத்திய ஜோஸ் இங்கிலீஸ் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மாக்ஸ்வேல், 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் அடித்து விளாசினார்.
முடிவாக 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதுவே சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட இலக்கு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து தரப்பில் இருந்து மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ப்ரைடன் கார்ஸ், அதில் ரஷித் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இரு அணி ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
ஆஸ்திரேலியா: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.
இங்கிலாந்து: பிலிப் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வூட்
நேருக்கு நேர்
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 161 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 91-ல் ஆஸ்திரேலியாவும், 65-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டத்தில் முடிவில்லை. சாம்பியன்ஸ் கோப்பையில் இரு அணிகளும் 5 முறை சந்தித்ததில் இங்கிலாந்து 3 முறையும், ஆஸ்திரேலியா 2 தடவையும் வென்றுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.