சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் கடந்த புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia vs South Africa LIVE Cricket Score, Champions Trophy 2025
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் டிராபியில் 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. வங்கதேசம் பாகிஸ்தான் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா மோதல்
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள 7-வது லீக்கில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதவிருந்தன.
இந்த நிலையில், போட்டி நடக்க இருந்த ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் மழை புகுந்து விளையாடியது. இதனால் டாஸ் போடுவதில் கூட தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.