sports | cricket | australia | steve-smith | david-warner: தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், 3 டி20 போட்டியையும் வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு ஒயிட் வாஷ் அடித்தது ஆஸ்திரேலியா. தற்போது 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2 -1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆஸி. வீரர்களுக்கு புதிய உத்தரவு
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த நெக் ப்ரொடக்டர் காகிசோ ரபாடா பவுன்சரால் தாக்கப்பட்டு, மூளையதிர்ச்சியுடன் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 'நெக் ப்ரொடெக்டர் அவசியம்' என்கிற உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:- Australia mandates neck protectors for batters facing pace
வருகிற அக்டோபர் முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வேகமான அல்லது நடுத்தர வேக பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது ஹெல்மெட்களில் நெக் ப்ரொடக்டர்களை (கழுத்து பாதுகாப்பான்) காட்டாயம் அணிய வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டில் பிலிப் ஹியூஸ் இறந்ததிலிருந்து நெக் ப்ரொடக்டர்களைப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய நிர்வாகக் குழு பரிந்துரைத்தது. ஆனால் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் உட்பட பல முன்னணி பேட்ஸ்மேன்கள் அவற்றை அணிவதை தவிர்த்தும், எதிர்த்தும் வந்தனர். அவர்கள் இப்போது அக்டோபர் 1 முதல் உள்நாட்டில் அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது, நெக் ப்ரொடக்டர்களை அணிய வேண்டும் அல்லது ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிமுகப்படுத்தும் விதிகளின் கீழ் தடைகளை எதிர்கொள்ள வேண்டும்.
"நமது விளையாட்டில் தலை மற்றும் கழுத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சமீபத்திய ஆண்டுகளில் நெக் ப்ரொடெக்டர் தயாரிப்பு நீண்ட தூரம் வந்துள்ளது, மேலும் பலதரப்பட்ட நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பல ஆலோசனைகளுக்குப் பின்பே அவற்றை கட்டாயமாக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டமிடல் தலைவர் பீட்டர் ரோச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“