Australia vs Afghanistan: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணமாக சென்று அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. இந்த நிலையில், மனித உரிமை பிரச்சனைகள் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை ஒத்திவைத்துள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மனித உரிமைகளில் குறிப்பிடத்தக்க மீறலுக்குப் பிறகு, மார்ச் 2023 இல் திட்டமிடப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை முன்பு ஒத்திவைத்தோம். நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான நிலைமைகளை எதிர்பார்த்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
கடந்த பன்னிரண்டு மாதங்களில், ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலைமை மோசமாகி வருகிறது என அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது. இந்த காரணத்திற்காக, நாங்கள் எங்கள் முந்தைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டோம், மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு தொடரை ஒத்திவைத்துள்ளோம் ”என்று தெரிவித்துள்ளது.
ஜனவரி 2023 இல், இதே போன்ற பிரச்சினைகள் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ஒத்திவைத்தது. "பெண்கள் மற்றும் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மேலும் கட்டுப்பாடுகள் தொடர்பான தலிபான்களின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்தது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். “மார்ச் மாதத்தில் எங்களுடன் விளையாடும் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதைக் கேட்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் பெருமிதம் கொள்கிறேன், உலக அரங்கில் நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு எங்களை அந்தப் பயணத்தில் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தால், பி.பி.எல்-லில் நான் இருப்பதில் இருந்து யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, அந்தப் போட்டியில் விளையாடுவது குறித்த எனது முடிவை பரிசீலிப்பேன், ”என்று ஆப்கான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் கேப்டன் முகமது நபி, “தொடரை ஒத்தி வைத்தது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு எனது கடுமையான கண்டனங்கள். கிரிக்கெட் மூலம், ஆப்கானியர்களுக்கு சரியான வாய்ப்பையும் மேடையையும் கொடுத்தால் நாங்கள் சிறந்தவர்கள் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளோம்" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடைசியாக, 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் லீக் கட்டத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. அந்த ஆட்டத்தில் 292 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்து திணறியது. அப்போது களம் புகுந்த க்ளென் மேக்ஸ்வெல் அதிரடியாக 201 ரன்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
செப்டம்பர் 2021 இல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய உடனேயே, விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தானில் எழுந்தன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia postpones Afghanistan tour for three T20Is due to human rights issues again
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“