ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில், ஆஸ்திரேலிய அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது
கிரிக்கெட்டில் மாபெரும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்தது ஆஸ்திரேலியா. உலகின் எந்த அணியாக இருந்தாலும், அந்த அணியை அவர்கள் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடிப்பது ஆஸ்திரேலியாவின் வழக்கம். கில்கிறிஸ்ட், பாண்டிங், ஹெய்டன், சைமண்ட்ஸ், பெவன், பிரட் லீ, மெக்ரத், வார்னே என்று முன்னாள் வீரர்கள் கொண்ட ஆஸி., அணி களம் இறங்கினாலே, எதிரணியின் தோல்வி பாதி உறுதி செய்யப்பட்டுவிடும். அப்படிப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு சமீப ஆண்டுகளில் சரிவை சந்தித்தால், தற்போது அந்த அணி ஒருநாள் தரவரிசையிலும் சரிவை சந்தித்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியால் இன்று வெளியிடப்படட ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 34 வருடத்திற்குப் பிறகு இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1984-ல் 6-வது இடத்தில் இருந்தது.
இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.