New Update
/indian-express-tamil/media/media_files/SFnfYNNXTQm8Ox5W4bl3.jpg)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் திலக் வர்மா, சுந்தர், அக்சர் படேல் மற்றும் ஷிவம் துபே ஆகிய நான்கு ஆல்-ரவுண்டர்களை சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் திலக் வர்மா, சுந்தர், அக்சர் படேல் மற்றும் ஷிவம் துபே ஆகிய நான்கு ஆல்-ரவுண்டர்களை சேர்த்துள்ளது.
India-vs-australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வி ஏமாற்றத்திற்குப் பிறகு, இந்தியா மீண்டும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிடம் கோப்பை பறிகொடுத்த இந்தியா அந்த அணிக்கு எதிராக இப்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நேருக்கு நேர் மோத உள்ளது. வருகிற 23 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
இந்த டி20 தொடரில் கணுக்கால் காயம் காரணமாக ஓய்வு எடுத்து வரும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இதேபோல் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த டி20 தொடருக்கு இந்தியா அதன் சிறந்த இரண்டாவது அணியை கட்டமைத்து உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ரின்கு சிங், மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற அதிரடியான இளம் வீரர்கள் கொண்ட படையை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துகிறார். இந்த வீரர்கள் அனைவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கடைசியாக இடம்பெற்றனர். அதோடு 2023 சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் விளையாடினர்.
2024 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், கோலி, ரோகித் மற்றும் ராகுல் போன்ற முன்னணி இடம்பெற வாய்ப்பில்லை. எனவே, ஆஸ்திரேலியா டி20 தொடர் இளம் வீரர்களுக்கு உலக சாம்பியன்களுக்கு எதிராக தங்களது அபார திறமையை வெளிப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
கடந்த ஆண்டு உலகக் கோப்பைக்கு முன்னதாக வீரர்களை அடையாளம் கண்டு ராகுல் டிராவிட் செய்ததைப் போலவே, இந்த முறையும் இந்தியாவும் ஜூன் 04, 2024 அன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான வீரர்களின் முக்கிய குழுவைக் கண்டறிய ஆர்வமாக உள்ளது.
ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக்கோப்பையின் நாக் அவுட் சுற்றை தவறவிட்டார். அவர் இல்லாதது இந்திய அணியின் சமநிலையை பாதித்தது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அதே தவறை இந்தியா செய்ய விரும்பவில்லை. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் திலக் வர்மா, சுந்தர், அக்சர் படேல் மற்றும் ஷிவம் துபே ஆகிய நான்கு ஆல்-ரவுண்டர்களை சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் மட்டுமின்றி, டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களிலும் இந்தியா விளையாடவுள்ளது. ஆனால் ஹர்திக் பாண்டியா இல்லாத முக்கிய வீரர்களை இந்தியா இப்போது அடையாளம் காண வேண்டியிருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா அல்லது ரின்கு சிங் போன்ற வீரர்களும், விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா களமிறங்கலாம். ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல் அல்லது சிவம் துபே ஆகியோரும், சுழலுக்கு ரவி பிஷ்னோய், வேகப்பந்து வீச்சுக்கு அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் ஆகிய வீரர்களும் களமாடலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:
சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.