Australia | Bangladesh | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்ற 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் லீக் சுற்றுடன் வீட்டு நடையைக் கட்டின
சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப் 2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் வருகிற 29 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மல்லுக்கட்டும்
இந்த நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு பார்படோஸில் உள்ள கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள சூப்பர் 8 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில், இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- வங்கதேசம் மோதல்
இதே நாளில் ஆஸ்திரேலியா- வங்கதேசம் இடையிலான ஆட்டம் ஆன்டிகுவாவில் உள்ளூர் நேரப்படி இரவில் தொடங்கினாலும் இந்திய நேரப்படி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, 141 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை ஆஸ்திரேலிய அணி துரத்தியது.
ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் அடித்திருந்தபோது, போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து புகுந்த விளையாடிய மழையால் போட்டி நடத்த முடியாமல் போனது. அப்போது ஆஸ்திரேலியா வெற்றி பெற 52 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. வார்னர் 53 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
மழை காரணமாக போட்டி கைவிடும் சூழல் நிலவிய நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் (டி.எல்.எஸ்.) விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் வங்காளதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 53 ரன்கள் அடித்தார். 3 விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா லீக் சுற்றில் நடந்த 4 போட்டிகளிலும் ஓமன், நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் பரம எதிரியான இங்கிலாந்தை தோற்கடித்ததன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை முடித்தது. மறுபுறம், வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து மற்றும் நேபாளத்திற்கு எதிரான மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தோல்வியடைந்த வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த அணிகளில் வழக்கம் போல் பலம் பொருந்திய ஆஸ்திரேலியாவின் கை ஓங்கும். இந்த இவ்விரு அணிகளுக்கும் டி20 போட்டியில் இதற்கு முன்பு 10 முறை மோதியுள்ளன. இதில் 6-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.