Australia vs Bangladesh World Cup 2019: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது வங்க தேசம். கடைசி கட்டம் வரை ஆஸ்திரேலியா மிரளும் விதமாக வங்கதேச வீரர்கள் அதிரடி காட்டினர்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் டிரெண்ட் பிரிட்ஜில் நேற்று நடந்த ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவும், ஆசிய அணிகளில் ஒன்றான வங்க தேசமும் மோதின. செமி பைனலில் இடம் பெறுவதில் ரன் ரேட்டும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அதற்கேற்ப அதிரடி காட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 166 ரன்கள் (147 பந்துகள், 14 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) அடித்து அசத்தினார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 53 ரன்கள், உஸ்மான் கவாஜா 89 ரன்கள், மேக்ஸ்வெல் 10 பந்துகளில் 32 ரன்கள் ஆகியோரும் ஆஸ்திரேலிய ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தார்கள்.
382 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம், தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்காரை (10 ரன்கள்) 4-வது ஓவரில் ரன் அவுட் முறையில் இழந்தது. ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியது வங்கதேசம்.
தமிம் இக்பால் (62 ரன்கள்), ஷாகிப் அல் ஹசன் (41 ரன்கள்), லிட்டன் தாஸ் (20 ரன்கள்) எடுத்து அவுட் ஆனார்கள். 4-வது பேட்ஸ்மேனாக இறங்கிய விக்கெட் கீப்பர் முஜிபுர் ரகுமான் அபாரமாக நின்று ஆடினார். 6-வது பேட்ஸ்மேனாக இறங்கிய முகமதுல்லாவும் அதிரடி காட்டி அவருக்கு துணை நின்றார்.
45 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களை கடந்தது வங்கதேசம். அப்போது இவ்வளவு பெரிய ஸ்கோரையும் வங்கதேசம் எட்டிப் பிடித்து விடுமோ? என்கிற மிரட்சி ஆஸ்திரேலிய வீரர்களிடம் தென்பட்டது. ஆனால் 46-வது ஓவரில் கோல்டியர் நைல் விசிய ‘ஸ்லோ பால்’-ஐ சிக்சருக்கு தூக்க முயன்று 69 ரன்களில் கேட்ச் ஆனார் முகமதுல்லா. அத்துடன் வங்க தேசத்தின் வெற்றிக் கனவு நொறுங்கியது.
வங்க தேச அணிக்கு தூண் போல நின்று, மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் பந்துகளையெல்லாம் சிதறடித்த முஜிபுர் ரகிம் சதம் அடித்தார். இறுதி வரை அவுட் ஆகாமல் 102 ரன்கள் (97 பந்துகள்) குவித்தார் அவர். 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்த வங்க தேசம், 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை 6 ஆட்டங்களில் ஆடிய வங்கதேசம் 2-ல் வெற்றி பெற்றிருக்கிறது. அரை இறுதி வாய்ப்பை தக்க வைக்க அடுத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகியவற்றுடன் நடைபெறும் போட்டிகள் வங்க தேசத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆஸ்திரேலிய அணி 6 ஆட்டங்களில் ஆடி, 5-ல் வெற்றியைப் பெற்று அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியிருக்கிறது. எனினும் அடுத்த 3 ஆட்டங்களில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என வலிமையான அணிகளை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள இருக்கிறது.
தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வங்கதேச கேப்டன் மஷ்ரப் மோர்தஸா, ‘பீல்டிங்கில் 40 முதல் 50 ரன்கள் அதிகம் விட்டுக் கொடுத்துவிட்டோம். எனவே இது கஷ்டமான டார்கெட்டாக அமைந்தது. எனினும் பாசிட்டிவாக விளையாடினோம்’ என்றார்.
ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘கன்சிஸ்டண்டாக விளையாடி வருகிறோம். பார்ட்னர்ஷிப்களும் நன்றாக அமைந்தன. அரை இறுதியைப் பற்றி நினைக்கவில்லை. ஆனாலும் டாப் 4 இடத்திற்கும் நிச்சயம் வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.