worldcup 2023 | australia | netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia vs Netherlands Live Score, World Cup 2023
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் 2 பவுண்டரிகளை விரட்டி 9 ரன்கள் எடுத்த மிட்செல் மார்ஷ் வான் பீக் வீசிய 3.5வது ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் டேவிட் வார்னர் உடன் ஸ்டீவன் ஸ்மித் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில், வார்னர் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஸ்மித் 53 பந்துகளில் அரைசதம் அடித்தார். 68 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே களத்தில் இருந்த வர்னருடன் ஜோடி சேர்ந்த நிலையில், இந்த ஜோடியம் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதில் அரைசதம் அடித்த லாபுசாக்னே 47 பந்துகளில் 7 பவுண்டரிங்க்ள் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருக்குப் பின் வந்த ஜோஷ் இங்கிலிஸ் உடன் தொடக்க வீரரான வார்னர் ஜோடி அமைத்தார். இதில் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 91 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் இருந்த ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 8 ரன்களில் வெளியேறினாலும், நெதர்லாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல் 40 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் உலககோப்பை தொடரில் அதிகவேக சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சதம் கடந்த பிறகும் அதிரடியை தொடர்ந்து மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 9 பவுண்டரி 8 சிக்சருடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில், வான் பீக் 4 விக்கெட்டுகளும், டி லிடி 2 விக்கெட்டுகளும், ஆர்யன் தத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 400 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய விக்ரம் ஜித் சிங், அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், மறுபுறம், மேக்ஸ் ஓதவுட் 6 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து களமிறங்கிய அக்கர்மேன், 10 ரன்களுக்கும், விக்ரம் ஜித் சிங் 25 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 25 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் நெதர்லாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 21 ஓவர்களில் நெதர்லாந்து அணி 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கில்பிரஜித் 11 ரன்களுக்கும், தேஜா 14 ரன்களுக்கும், ஆட்டமிழந்த நிலையில், மற்றவீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஸாம்பா 4 விக்கெட்டுகளும், மார்ஷ் 2 விக்கெட்டுகளும், கம்மின்ஷ் ஹாசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், பாஸ் டி லீடே, தேஜா நிடமனுரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.