worldcup 2023 | Australia vs New Zealand: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் இன்று (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு தொடங்கிய 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். நியூசிலாந்தின் பந்துவீச்சாளர்கள் இந்த ஜோடியை உடைக்க நீண்ட போராடினர். வார்னர் - டிராவிஸ் ஜோடியில் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Australia vs New Zealand Live Score, World Cup 2023
65 பந்துகளில் 5 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை பறக்கவிட்ட வார்னர் 81 ரன்கள் எடுத்த நிலையில் 19.1வது ஓவரை வீசிய க்ளென் பிலிப்ஸ் வசமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவருடன் மறுமுனையில் இருந்த டிராவிஸ் ஹெட் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் அடித்து மிரட்டினார். அவர் 67 பந்துகளில் 10 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசி 109 ரன்கள் குவித்து க்ளென் பிலிப்ஸ் பந்துவீச்சில் (23.2 ஓவர்) அவுட் ஆனார்.
இதன்பின்னர் களத்தில் இருந்த மிட்செல் மார்ஷ் - ஸ்டீவன் ஸ்மித் ஜோடியில், ஸ்மித் 18 ரன்னுக்கும், மார்ஷ் 36 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். 2 பவுண்டரியை விரட்டிய மார்னஸ் லாபுசாக்னே 18 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதன்பிறகு இணைந்த கிளென் மேக்ஸ்வெல் - ஜோஷ் இங்கிலிஸ் ஜோடியில் பவுண்டரி சிக்ஸர்களை அதிரடியாக விளாசிய மேக்ஸ்வெல் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களம் புகுந்த ஜோஷ் இங்கிலிஸ் - கேப்டன் பேட் கம்மின்ஸ் ஜோடியில், கம்மின்ஸ் பவுண்டரிகளை விரட்டி பேட்டிங்கை தொடங்கினார். அவரது விக்கெட்டை நியூசிலாந்து கைப்பற்றி விடும் என நினைக்கையில் தான், அவர் ஜேம்ஸ் நீஷம் வீசிய 48 வது ஓவரை வெளுத்து வாங்கினார்.
அந்த ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் மொத்தமாக 4 சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் ஜேம்ஸ் நீஷம் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார். கேப்டன் கம்மின்ஸ் அதிரடியை தொடர தயாராக இருந்த நிலையில், 49 வது ஓவரை வீசிய டிரெண்ட் போல்ட் தனது முதல் பந்தில் ஜோஷ் இங்கிலிஸ் (38 ரன்) விக்கெட்டை கைப்பற்றினார். 2வது பந்தில் மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன் எடுக்க, 3வது பந்தை சந்தித்ததை கேப்டன் கம்மின்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் போல்ட். அவர் தனது கடைசி பந்தில் ஆடம் ஜம்பாவின் விக்கெட்டையும் எடுத்தார்.
கடைசி ஓவரை வீசிய மாட் ஹென்றி தனது 2வது மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டை கைப்பற்றவே, ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய க்ளென் பிலிப்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்கு
நியூசிலாந்து அணிக்கு 389 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டெவன் கான்வே - வில் யங் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருப்பினும், முதல் 7 ஓவருக்கு மேல் தாக்குபிடிக்காத இந்த ஜோடியில் 6 பவுண்டரிகளை விரட்டிய கான்வே 28 ரன்னில் அவுட் ஆனார்.
அவருடன் மறுமுனையில் இருந்த வில் யங் 32 ரன்னில் அவுட் ஆனார். இதன்பின்னர் களம்புகுந்த ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் ஜோடியில் டேரில் மிட்செல் 42 பந்துகளில் அரைசதம் விளாசினார். 51 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்கவிட்ட அவர் 54 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு ரச்சின் ரவீந்திரா - கேப்டன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தனர். இதில் ரச்சின் ரவீந்திரா 49 பந்துகளில் சிக்சருடன் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா இந்த உலககோப்பை தொடரில் தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். சதம் கடந்த பின்னர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் நோக்கில் விளையாடிய ரவீந்திரா 89 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 116 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் லாதம் 22 பந்துகளில் 21 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து வந்த பிலிப்ஸ் 12 ரன்களிலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாண்டனர் 12 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களும் குவித்து வெளியேறினார். இதனால் இறுதிக்கட்டத்தில் நியூசிலாந்து சரிவை சந்தித்த நிலையில், ஜிம்மி நீஷம் மாட் ஹென்ரி ஜோடி அணியை மீட்க போராடியது, மார்க் ஹென்ரி 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் இறுதிக்கட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நீஷம் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் பந்தில் ஒரு ரன்னும், 2-வது பந்தில் வைடுடன் 5 ரன்களும் கிடைத்தது.
அடுத்த 3 பந்துகளில் 6 ரன்கள் கிடைத்ததால் கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை எதிர்கொண்ட நீஷம் 2 ரன்கள் ஓட முயற்சித்தபோது ரன் அவுட் ஆனார். 39 பந்துகளை சந்தித்த நீஷம் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரன் இல்லாத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 383 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஷாம்பா 3 விக்கெட்டுகளும், ஹாசில்வுடு் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரு அணிகளின் ஆடும் 11 வீரர்கள்:
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
நியூசிலாந்து: டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் / நியூசிலாந்து ), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.