australia vs pakistan : உலககோப்பை கிரிக்கெட் தொடர் தற்பொழுது இங்கிலாந்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த உலககோப்பை தொடரில் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில் நேற்று இங்கிலாந்தில் உள்ள டௌன்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் இந்த உலககோப்பை தொடரின் 17வது லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் நடப்பு சேம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆஸ்திரேலியா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்து விளையாடியது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்களாக வார்னர், பின்ச் களமிறங்கினர். தங்களது பொறுப்பை மிக சரியாக உணர்ந்திருந்த இருவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்ச் 84 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்த ஜோடி 146 ரன்கள் குவித்தது.
அடுத்த வந்த கிளன் மேக்ஸ்வெல் 20 ரன்னில் அவுட் ஆக மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தனது 15வது சதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து விளையாடிய வார்னர் 107 ரன்னில் ஷாஹீன் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது.308 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென விக்கெட்டுக்கள் வீழ்ந்ததால் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.
44 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 45 ரன்களே தேவையாக இருந்தது. 36 பந்துகளில் 3 விக்கெட்டுக்கள் கையில் இருந்த நிலையில் சர்ஃபாஸ் அகமது, வாஹிப் ரியாஸ் ஆகிய இருவரும் அருமையாக விளையாடி கொண்டிருந்தனர். ஆனால் 45வது ஓவரில் வாஹிப் அவுட் ஆனது பாகிஸ்தான் அணிக்கு பேரதிர்ச்சியாக முடிந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை தொடரில் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே ஆல் அவுட்டாகியது. தற்போது, 3வது முறையாக பாகிஸ்தானுடன் மோதிய போட்டியில் ஆல் அவுட்டாகி இருக்கிறது
ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது அமீர் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதற்கு முன்பு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த தோல்வியை சரிசெய்யும் நிலையில், நேற்று பாகிஸ்தான் அணியுடன் மோதி வெற்றி பெற்றுள்ளது.