worldcup 2023 | south-africa vs australia: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் தொடங்கும் 10வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆஸி., பவுலிங் - தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா ஜோடி களமிறங்கிய நிலையில், இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியில் குயின்டன் டி காக் 51 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 19.4வது ஓவர் வரை ஆஸ்திரேலியா இந்த ஜோடியை உடைக்க போராடியது. அப்போது, 2 பவுண்டரிகளை மட்டும் விரட்டிய கேப்டன் பவுமா 35 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரஸ்ஸி வான் டெர் டுசென் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். களத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டி காக் 91 பந்துகளில் சதம் விளாசினார். அவர் 106 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு 109 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய மார்க்ரம் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அவுட் ஆனார். மறுமுனையில் ஆடிய கிளாசன் 29 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் ஜான்சென் இருவரும் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி ரன் குவிக்க முயன்றனர்.
மில்லர் 17 ரன்களிலும், ஜான்சென் 26 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அடுத்ததாக ரபாடா மற்றும் மஹராஜ் இருவரும் களமிறங்கி ரன் எதுவும் எடுக்காத நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்களையும், ஹேசல்வுட், கம்மின்ஸ், ஜாம்பா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியா பேட்டிங்
ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக மிட்சல் மார்ஷ் மற்றும் வார்னர் களமிறங்கினர். லுங்கி எங்கிடியின் மிரட்டல் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இருவரும் திணறினர். மார்ஷ் 7 ரன்களில் ஜான்சென் பந்தில் பவுமாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
மறுமுனையில் ஆடிய வார்னர் 13 ரன்களில் எங்கிடி பந்தில் வாண்டர் சென்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் பவுண்டரிகளாக அடிக்க, மறுமுனையில் லபுசனே நிதானம் காட்டினர். இருப்பினும் ஸ்மித் 19 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் 5 ரன்கள், மேக்ஸ்வெல் 3 ரன்கள், ஸ்டாய்னிஸ் 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
லபுசனே – ஸ்டார்க் ஜோடி சிறிது நேரம் நிதானமாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தது. இந்தநிலையில் ஸ்டார்க் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கம்மின்ஸ் களமிறங்கினார். அரைசதத்தை நெருங்கிய நிலையில் லபுசனே 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக ஜாம்பா களமிறங்கிய சிறிது நேரத்திலே கம்மின்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேசல்வுட் 2 ரன்களில் அவுட் ஆக ஆஸ்திரேலியா அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜாம்பா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணியில், ரபாடா 3 விக்கெட்களையும், ஜான்சென், மகராஜ், ஷாம்சி தலா 2 விக்கெட்களையும், எங்கிடி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முதல் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் அடி வாங்கியுள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:-
தென் ஆப்பிரிக்கா:
குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி
ஆஸ்திரேலியா:
டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி இருந்து மீள போராடும். மறுபுறம், டெம்பா பாவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்தது. இதில் குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம் ஆகிய வீரர்கள் சதம் விளாசி மிரட்டினர். அதனால், அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.