மாயங்க் அகர்வாலை கீழ்த்தரமாக விமர்சித்த ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள்!

அவரது வார்த்தைகளை குறிப்பிட்டு, இந்திய ரசிகர்கள் சமூக தளங்களில் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்

மெல்போர்னில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சிறப்பாக ஆடிய இந்திய தொடக்க வீரர் மாயங்க் அகர்வாலை ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் கீழ்த்தரமாக விமர்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளம் வீரர் மாயங்க் அகர்வாலுக்கு, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக அணியில் வாய்ப்புக் கிடைத்தது. ‘மேன் இன் ஃபார்ம்’ மாயங்க் அகர்வால், பல இரவுகள் தூக்கம் கூட இல்லாமல் இந்த வாய்ப்பிற்காகத் தான் காத்திருந்தார்.

அதுவும், ஆஸ்திரேலிய மண்ணில், அந்த அணிக்கு எதிராகவே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படி கிடைத்த சான்ஸை, மிக நேர்த்தியாக கையாண்டு, 161 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

முதல் போட்டியென்ற பதட்டமோ, பயமோ, தடுமாற்றமோ அவரது இன்னிங்சில் துளி கூட இல்லை. ‘திஸ் ஈஸ் மை ரூட்’ என்று நிர்ணயித்து தடுமாற்றமே இன்றி மிக அழகாக ஆடினார்.

ஆனால், ஆட்டத்தின் போது மாயங்க் அகர்வாலை மிக கீழ்த்தரமாக ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். கெர்ரி ஓ’கீஃபே என்ற வர்ணனையாளர், “அகர்வால், சில கேண்டீன் பணியாளர்கள் அல்லது வெயிட்டர்கள் பந்து வீச்சில் வேண்டுமானால் முச்சதம் அடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.

‘கேண்டீன் பணியாளர்கள்’ என்று இந்திய முதல் தர கிரிக்கெட்டின் தரத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார் . அவர் இப்படி வர்ணனை செய்த பொழுது, ஷேன் வார்ன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பின், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் தனது வர்ணனையின் போது, “இந்தியாவில் மாயங்க் அகர்வால் வைத்துள்ள ஆவரேஜ் 50 என்பது, ஆஸ்திரேலியாவில் 40க்கு சமம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைக் கூட விட்டுவிடலாம். ஆனால், கெர்ரி ஓ’கீஃபே-வின் வர்ணனை தான் மிகவும் கீழ்த்தரமாக அமைந்தது. அவரது வார்த்தைகளை குறிப்பிட்டு, இந்திய ரசிகர்கள் சமூக தளங்களில் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க – மாயங்க்கின் ‘தில்’ ஆட்டம்…! புஜாராவின் ‘நில்’ இன்னிங்ஸ்…! இந்திய அணியின் சூப்பர்ஹிட் ‘ஃபர்ஸ்ட் ஷோ’

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close