33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியா அணி நெதர்லாந்து அணியிடம் 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஒலிம்பிக் ஹாக்கி வீரர் தாமஸ் கிரெய்க், கோகைன் போதைப்பொருள் வாங்க முயன்றதாக சந்தேகத்தின் பேரில் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாமஸ் கிரெய்க் கோகைன் போதைப்பொருள் வாங்க முயன்றபோது கையும் களவுமாக கிரேக் கைது செய்யப்பட்டார் என்றும், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு) கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார் அவரை கைது செய்தபோது ஒரு கிராம் போதைப்பொருள் கையில் வைத்திருந்தார் எனவும், புதன்கிழமை காலை வரை அவரை காவலில் வைத்திருந்ததாக போலீசார் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, மாத்திரை வடிவிலான போதைப்பொருள், கோகைன் போதைப்பொருள் வைத்திருந்த விற்பனையாளரும் (வயது 17) கைது செய்யப்பட்டுள்ளார். விற்பனையாளரிடம் அதிகப்படியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட தாமஸ் கிரெய்க், , புதன்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்
ஆனால், அந்த வீரரின் அடையாளத்தை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தவில்லை. எனினும், இது தொடர்பாக நேற்று புதன்கிழமை காலை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், "ஆகஸ்ட் 6 ஆம் தேதி பாரிஸில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வீரர் போலீஸ் காவலில் இருப்பதை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி (ஏ.ஓ.சி) உறுதிப்படுத்தியுள்ளது. அவர் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை. ஏ.ஓ.சி தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு அணி வீரருக்கான ஆதரவை ஏற்பாடு செய்து வருகிறது." என்று கூறியுள்ளது.
விடுவிப்பு
இந்நிலையில், போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் தாமஸ் கிரெய்க் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். மேலும் முறையான குற்றச்சாட்டுகள் அல்லது அபராதம் எதுவும் அவருக்கு விதிக்கப்படவில்லை.
தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து காவல் நிலையத்திற்கு வெளியே தாமஸ் கிரெய்க் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 24 மணிநேரத்தில் நடந்தவற்றுக்கு முதலில் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். நான் ஒரு பயங்கரமான தவறு செய்துவிட்டேன். என் செயல்களுக்கு முழுப்பொறுப்பேற்கிறேன்.
எனது செயல்கள் அனைத்தும் என்னுடையது, எந்த வகையிலும் எனது குடும்பம், எனது அணியின் மதிப்புகளைப் பிரதிபலிக்கவில்லை. நண்பர்களே, எனது விளையாட்டு மற்றும் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டிக்காக நான் உண்மையிலேயே வருந்துகிறேன்" என்று அவர் கூறியதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, தாமஸ் கிரெய்க் உடனடியாக ஒலிம்பிக் கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அவரது மீதமுள்ள சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.