போதைபொருள் இல்லா எதிர்காலத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. 2, 5 மற்றும் 8 கி.மீ. என மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டி கருமத்தம்பட்டி, கணியூர் சுங்கச்சாவடி, கேபிஆர் கல்லூரி முகப்பு என மூன்று இடங்களில் தொடங்கி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதோடு முதலில் வந்த 100 பேருக்கு சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய தலைவர் கே.பி. ராமசாமி, "போதை பொருள் இல்லாத சமூகம் நல்வாழ்வுக்கு வழிவகுக்கும். இதுபோல் ஒன்றாக கூடி விழிப்புணர்வை பரப்பி ஊக்குவிப்பதன் மூலம் இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுப்பர்" எனக் கூறினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் த. சரவணன் பேசுகையில் "மாபெரும் அளவில் போதைப் பொருள் இல்லா எதிர்காலத்திற்கான இந்த விழிப்புணர்வு மாரத்தானை நடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தெரிவித்தார்.
இளைஞர்கள் எவ்வாறு போதை பொருள் பயன்பாட்டிற்கு பழக்கமாகிறார்கள் என்பதைப் பற்றி விளக்கி அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து கருமத்தம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி என பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர்.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“