Tamilnadu Cricket Team | Vijay Hazare Trophy: இந்திய மண்ணில் 22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 38 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் தற்போது அரைஇறுதிப் போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இப்போட்டியானாது பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாடு - ஹரியானா மோதல்
இந்நிலையில், நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஹரியானா அணி 50 முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது.
ஹரியானா அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய ஹிமான்ஷு ராணா 116 ரன்கள் எடுத்தார். அரைசதம் அடித்த யுவராஜ் சிங் 65 ரன்களும், சுமித் குமார் 48 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 294 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தமிழ்நாடு அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபா அபாராஜித் 7 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த ஹரி நிஷாந்த் 1 ரன்னில் வெளியேறினார். இதனிடையே, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பறக்க விட்ட மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 30 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதன்பின்னர் வந்த விஜய் சங்கர் 23 ரன்னில் ரன்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் – தினேஷ் கார்த்திக் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். இந்த ஜோடியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய பாபா இந்திரஜித் அரைசதம் அடித்தார்.
அடுத்து வந்த ஷாரூக் கான் 13 ரன்னுக்கும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த பாபா இந்திரஜித் 64 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், தமிழ்நாடு அணி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்பிறகு களம்புகுந்த வீரர்களில் சாய் கிஷோர் 29 ரன்னுக்கும், சித்தார்த் 3 ரன்னிலும், வருண் சக்கரவர்த்தி 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நடராஜன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், 47.1 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்த தமிழ்நாடு அணி 230 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து ஹரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரியானா தரப்பில் அதிகபட்சமாக அன்ஷூல் 4 விக்கெட்களையும், ராகுல் திவேதியா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த தோல்வியால் தமிழக அணியில் அரையிறுயுடன் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
உதட்டில் டேப் ஒட்டியபடி பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடிய பாபா இந்திரஜித் காயம் காரணமாக உதட்டில் டேப் ஒட்டியபடி பேட்டிங் செய்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டிக்கான இன்னிங்ஸ் இடைவேளையின் போது, இந்திரஜித் குளியலறையில் தவறி விழுந்துள்ளார். அப்போது அவரது உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், இந்திரஜித் தனது காயத்திற்காக உதட்டில் டேப் ஒட்டியபடி பேட்டிங் செய்ய களமிறங்கினார். அவருக்கு 16வது ஓவரின் மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் அரைசதம் அடித்திருந்த அவர் 71 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார். மும்பைக்கு எதிரான தமிழக அணியின் காலிறுதி வெற்றியில் இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் 7 போட்டியில் விளையாடிய அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 270 ரன்களுக்கு மேல் எடுத்து இந்த பதிப்பில் தமிழக அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.