Babar-azam | pakistan: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
இந்த தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அக்டோபர் 6-ம் தேதி நடக்கும் அதன் முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதன்பிறகு, அக்டோபர் 10-ம் தேதி இலங்கை அணியுடன் மோதுகிறது. தொடர்ந்து, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான போட்டி அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
முடிவுக்கு வந்த விசா சிக்கல்
இந்நிலையில், உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வந்துசேருவதில் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டு இருந்தது. போட்டியில் பங்கேற்கும் 9 வெளிநாட்டு அணிகளில் விசா கிடைக்காத ஒரே அணியாக பாகிஸ்தான் இருந்தது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பாகிஸ்தான் அணிக்கான விசாக்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) பயணிம் செய்ப்பவர்களின் பாஸ்போர்ட்டுகளை இப்போது சேகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி நாளை புதன்கிழமை (செப்டம்பர் 27) மாலை 3.30 மணிக்கு தங்கள் முதல் ஆட்டம் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடமான ஐதராபாத் புறப்பட உள்ளது. பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற உள்ளது
பாபர் அசாமுக்கு அபராதம்
இந்நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பாபர் அசாமுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் கார் ஓட்டிச் சென்ற அவருக்கு ஒன்றல்ல இரண்டு போக்குவரத்து விதிகளை மீறியதற்கான அபராதம் போடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 17 அன்று லாகூரில் உள்ள குல்பெர்க் பகுதிக்கு கேப்டன் பாபர் அசாம் சென்றுள்ளார். அப்போது அவர் பாதையை (லேன்) மாறி காரை ஓட்டியுள்ளார். காரை மறித்த போக்குவரத்து போலீசார் அவருக்கு பாதையை மாறியதற்காக அபராதம் போட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது பின்னர் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கும் சேர்த்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். இரண்டு விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.