Bajrang Punia donates six months’ salary COVID-19 relief fund
கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததை விட இந்தியாவில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்றுநோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisment
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வருகிற 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலாகிறது.
கொரோனா பாதிப்பை சமாளிக்கும் பொருட்டு பலரும் அரசுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ஆறு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பணிபுரியும் ஹரியானாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், "நான் எனது ஆறு மாத ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன். இந்த நேரத்தில் நாம் வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஆனால், ஒலிம்பிக் போட்டிகளுக்கான எனது பயிற்சிகளை நான் நிறுத்தவில்லை. தினம் நான் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதே சமயம், நமது உடல்நலத்திலும் நாம் அக்கறை கொள்வது அவசியமாகும்.
இப்போது உள்ள சூழலை பார்த்தால், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதே சிறந்த முடிவாக இருக்கும். இது நமக்கு மட்டுமல்ல; பல்வேறு நாடுகளில் இருந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கும் பயனளிக்கும். இந்த தருணம் நாம் ஒவ்வொருவருக்கும் மிகவும் கடினமானது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக எம்.பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், தனது எம்பி நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை, டெல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்காக ஒதுக்கியுள்ளார்.
அதேபோல் முன்னாள் வீரர்கள் இர்பான் பதான் - யூசுஃப் பதான் ஆகியோர் பரோடா அரசு நிர்வாகத்துக்கு 4000 முகக் கவசங்களை அளித்துள்ளனர்.