“கங்கையில் பதக்கங்களை மூழ்கடிப்போம், சாகும் வரை உண்ணாவிரதம்”: மல்யுத்த வீரர்கள்
காவல்துறை நடவடிக்கையை கண்டித்து ஒலிம்பிக் மற்றும் உலக பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு; சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு
மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சங்கீதா போகட் மற்றும் பஜ்ரங் புனியா
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான ரியோ 2016 வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், டோக்கியோ 2020 பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் ஆகியோர் காவல்துறையின் அடாவடித்தனத்தைக் கண்டிக்கும் விதமாக, ஒலிம்பிக் மற்றும் உலகப் பதக்கங்களை செவ்வாய்க்கிழமை ஹரித்வாரில் கங்கையில் வீசப் போவதாகக் கூறியுள்ளனர். மேலும், புதுடெல்லியின் இந்தியா கேட் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisment
“இந்தப் பதக்கங்கள்தான் எங்கள் உயிர் மற்றும் ஆன்மா. கங்கை நதியில் அவற்றை வீசிய பிறகு, நாங்கள் வாழ்வதில் அர்த்தமே இருக்காது. எனவே நாங்கள் இந்தியா கேட்டிற்குச் சென்று சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம், ”என்று மல்யுத்த வீரர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா நடந்து வரும் நிலையில், அதற்கு வெளியே பெண்கள் 'மகாபஞ்சாயத்து' நடத்த பேரணியாக சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்களை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், ஜந்தர் மந்தரில் உள்ள அவர்களின் போராட்ட இடத்தை அகற்றினர். மல்யுத்த வீரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டபோது, அவர்கள் எதிர்த்தனர், இது மல்யுத்த வீரர்களை பல காவலர்களால் பிடித்து தூக்கிச் சென்று பேருந்துகளில் ஏற்றுவது போன்ற வியத்தகு காட்சிகளுக்கு வழிவகுத்தது.
“மே 28 அன்று என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நாங்கள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட மற்றும் காவலில் வைக்கப்பட்ட விதத்தை நீங்கள் பார்த்தீர்கள். ஜந்தர் மந்தரில் எங்களின் போராட்டப் பகுதியை போலீஸார் அகற்றியது மட்டுமின்றி, நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதிலும், எங்கள் மீது எஃப்.ஐ.ஆர்.களையும் பதிவு செய்தனர். விளையாட்டு வீராங்கனைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களுக்கு நீதி கேட்டு ஏதாவது குற்றம் செய்திருக்கிறார்களா? நாங்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்பட்டுள்ளோம்” என்று மூன்று மல்யுத்த வீரர்களும் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
"இந்த நாட்டில் இனிமேல் எதுவும் இல்லை என்று நாங்கள் உணர்கிறோம். நாட்டிற்காக ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற தருணங்களை நினைக்கும் போது, நாம் ஏன் வென்றோம் என்று ஆச்சரியப்படுகிறோம். எங்கள் கழுத்தில் தொங்கும் பதக்கங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று நாங்கள் உணர்கிறோம், ”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”பதக்கங்களை யாருக்கு திருப்பித் தருவது என்று நாங்கள் பரிசீலித்தோம். ஒரு பெண்ணான குடியரசுத் தலைவரிடம் எங்களது பதக்கங்களைக் கொடுக்க வேண்டுமா? அவர் எங்களிடமிருந்து இரண்டு கிமீ தொலைவில் இருந்தார், ஆனால் எங்கள் கஷ்டத்தைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. பிறகு, எங்களை அவரது மகள்கள் என்று அழைக்கும் பிரதமரிடம் பதக்கங்களைத் திருப்பித் தரலாமா? ஆனால் இல்லை, நாங்கள் போராட்டம் நடத்தியதில் இருந்து நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று ஒருமுறை கூட அவர் எங்களிடம் கேட்கவில்லை. அதேநேரம், நாங்கள் எதிர்க்கும் மனிதரான பிரிஜ் பூஷண் ஷரண் சிங், நாடாளுமன்றத் தொடக்க விழாவுக்கு அழைக்கப்பட்டார்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil