Bangladesh vs Sri Lanka Score, Asia Cup 2023 Tamil News: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் நேற்று பாகிஸ்தானின் முல்தான் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் நேபாள அணியை தும்சம் செய்த பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையின் பல்லகெலேயில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 2-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி வழக்கம் போல் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:-
இலங்கை:
பாதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதீஷா பத்திரன.
வங்கதேசம்:
முகமது நைம், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்
வங்க தேசம் பேட்டிங்
வங்க தேச அணியில் முகமது நைம் மற்றும் தன்சிட் ஹசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஹசன் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷாண்டோ நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். மறுமுனையில் ஆடிய நைம் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷகிப் 5 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கி ஹிர்தோய் 20 ரன்களிலும், ரஹீம் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடி வந்த ஷாண்டோ அரை சதம் அடித்தார். அடுத்த வந்த ஹசன் மிராஸ் 5 ரன்களிலும், மெஹிதி ஹசன் 6 ரன்களிலும் அவுட் ஆகினர்.
சிறப்பாக ஆடி வந்த ஷாண்டோ 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிஷூர் டக் ஆகினர். இஸ்லாம் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய பதிரனா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். தீக்ஷனா 2 விக்கெட்களையும், தனஞ்ஜெயா, துனித், ஷனகா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை பேட்டிங்
இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷங்கா 16 ரன்களிலும், கருணரத்னே 1 ரன்னிலும் அவுட் ஆகினர், அடுத்து வந்த மெண்டிஸ் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக சதீரா மற்றும் அசலங்கா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதீரா 54 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஷனகா 14 ரன்கள் எடுக்க இலங்கை வெற்றி பெற்றது.
அசலங்கா 62 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்க தேச தரப்பில் ஷகிப் 2 விக்கெட்களையும், தஸ்கின், இஸ்லாம், ஹசன் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.