WTC Points Table Latest Update 2023-25: பாகிஸ்தான் மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய வங்கதேச கிரிக்கெட் அணி, ராவல்பிண்டியில் நடந்த முதலாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தலான வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி வரலாறு படைத்தது வங்கதேசம்.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வங்கதேச வீழ்த்தி சாதனை படைத்தது. அத்துடன், 2001 ஆம் ஆண்டு முதல் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானிடம் 12 போட்டிகளில் தோல்வியடைந்த வங்கதேசம், 14-வது முயற்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
இந்த சூழலில், 2-வது போட்டியில் பாகிஸ்தான் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 30 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்ற இந்தப் போட்டியிலும் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்த அபார வெற்றி மூலம், 2 போட்டிகள் கொண்ட 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளிய வங்கதேசம்
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வங்கதேசம் வெற்றி பெற்ற பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா (68.52 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், நியூசிலாந்து (50.00 சதவீதம்) 3ம் இடத்திலும் தொடர்கின்றன.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற வங்கதேசம் (45.83 சதவீதம்) 6 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து (45.00 சதவீதம்) 5ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (38.89 சதவீதம்) 6ம் இடத்திலும், இலங்கை (33.33 சதவீதம்) 7ம் இடத்திலும் உள்ளன.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் (19.05 சதவீதம்) 8ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) 9ம் இடத்திலும் உள்ளன.