worldcup 2023 | virat-kohli | india-vs-bangladesh: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்தப் போட்டிக்கு முன்னதாக பேசிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹீம், விராட் கோலி தன்னை எப்போதும் ஸ்லெட்ஜ் செய்ய முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய முஷ்பிகுர் ரஹீம், கோலியை மிகச் சிறந்த "போட்டியாளர்" என்றும், அவர் எப்போதும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறார். கோலி மற்றும் இந்திய அணியை எதிர்கொள்வது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
"உலகில் உள்ள சில பேட்டர்கள் ஸ்லெட்ஜிங்கை (ஸ்லெட்ஜிங் என்பது எதிரணி வீரரை வேண்டுமென்றே அவமதிப்பது அல்லது வாய்மொழியாக பயமுறுத்துவது) விரும்புகிறார்கள். அதனால் அவரை (விராட் கோலி) நான் ஒருபோதும் ஸ்லெட்ஜ் செய்வதில்லை. ஏனென்றால் அவர் இதனால் ஊக்கம் பெறுகிறார். அவர் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது, நான் எப்போதும் எனது பந்துவீச்சாளர்களை முடிந்தவரை அவரை சீக்கிரம் ஆட்டமிழக்க செய்யும்படி கூறுவேன்.
நான் அவருக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், நான் பேட்டிங் செய்ய செல்லும் ஒவ்வொரு முறையும் அவர் என்னை ஸ்லெட்ஜ் செய்ய முயற்சிக்கிறார். ஏனென்றால் அவர் மிகவும் போட்டியாளர் மற்றும் அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் தோல்வியடைய விரும்பவில்லை. அவருடனான போட்டியையும் சவாலையும் நான் மிகவும் விரும்புகிறேன். இது அவரையும் இந்தியாவையும் எதிர்கொள்வதன் மூலம் வருகிறது,” என்று முஷ்பிகுர் ரஹீம் கூறியுள்ளார்.
கடந்த 15 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள் உட்பட 67.25 சராசரியில் 807 ரன்கள் எடுத்துள்ள கோலி, வங்கதேசத்துக்கு எதிராக அற்புதமான சாதனை படைத்துள்ளார். இருப்பினும், வங்கதேச நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷாகிப் அல் ஹசனுக்கு எதிராக அவர் ஒரு அதிர்ச்சிகரமான சாதனையைப் படைத்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ஷாகிப் அல் ஹசன் 11 இன்னிங்ஸ்களில் 5 முறை கோலியை வெளியேற்றியுள்ளார். அவருக்கு எதிராக இதுவரை கோலி 148 பந்துகளில் 140 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.