இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (செப்.27) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, ஆடுகளம் ஈரமாக இருந்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 10 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 10:30 மணிக்கு போட்டி தொடங்கியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Bangladesh super fan Tiger Robi claims he was assaulted by the Kanpur crowd on Day 1
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, வங்கதேச அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடி வருகிறது. வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் ஜோடி தொடக்க வீரர்களாக களமாடினர். இந்த ஜோடி முதல் 8 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஜாகிர் ஹசன் ஆகாஷ் தீப் பந்தில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். அவருடன் ஜோடியில் இருந்த தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் 4 பவுண்டரியை விரட்டி ஆகாஷ் தீப் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆனார்.
இதன்பிறகு களத்தில் இருந்த மொமினுல் ஹக் - கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஜோடியில் கேப்டன் கேப்டன் நஜ்முல் 31 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்வதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அதோடு ரத்து செய்யப்பட்டது. முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
வங்கதேச ரசிகர் 'டைகர் ராபி' இந்தியர்களால் தாக்கப்பட்டாரா?
இந்நிலையில், இந்த போட்டிக்கு இடையே வங்கதேச கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான 'டைகர் ராபி', சுமார் 15 பேர் கொண்ட கும்பல் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கான்பூர் போலீசார், டைகர் ராபி போட்டியை பார்த்து கொண்டிருந்தபோது நீரிழப்பு காரணமாக உடல்நிலை மோசமானதாகவும், அதானலயே அவர் மயக்கமடைந்து சரிந்து விழுந்ததாகவும், அவர் யாராலும் தாக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இந்த சம்பவம் மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன்பு நடந்தது என்று குறிப்பிட்ட டைகர் ராபி, “கூட்டத்தில் ஒரு பிரிவினர் காலையில் இருந்து என்னை துஷ்பிரயோகம் செய்தனர். மதிய உணவு இடைவேளையின் போது நான் நஜ்முல் சாண்டோ மற்றும் மொமினுல் ஹக் ஆகியோரின் பெயரைக் கத்த ஆரம்பித்தேன். அந்த கும்பலில் சிலர் என்னைச் சுற்றித் தள்ளத் தொடங்கினர், என் சின்னம் (புலி) மற்றும் எனது கொடியைக் கிழிக்க முயன்றனர். நான் எதிர்த்தபோது அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர், ”என்று அவர் கூறினார்.
இதுபற்றி கல்யாண்பூர் போலீஸ் அதிகாரியான ஏ.சி.பி அபிஷேக் பாண்டே பேசுகையில், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் சரிந்து விழுந்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறை மற்றும் மருத்துவ பணியாளர்கள் அவருக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் இப்போது நன்றாக இருக்கிறார். தாக்குதல் பற்றிய யூகங்கள் முற்றிலும் தவறானவை. அவரை எந்த ரசிகரும் தாக்கவில்லை” என்று கூறினார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்களுக்காக மூடப்பட்ட பால்கனியில் டைகர் ராபி மட்டுமே நின்று கொண்டிருந்தார். “ஒரு போலீஸ்காரர் என்னை அந்த பிளாக்கில் நிற்க வேண்டாம் என்று சொன்னார். நான் பயந்துதான் இருந்தேன். காலையில் இருந்தே துஷ்பிரயோகம் செய்தனர். இதுபோன்ற சம்பவங்களை புரிந்துகொள்வதற்கு நான் போதுமான அளவு பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். காலையிலிருந்து அவர்கள் ஓய்வில்லாமல் என்னை வம்பிழுத்தனர். உங்கள் அணியை, உங்கள் நாட்டை ஆதரிப்பது குற்றமா? ”என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வங்கதேச ரசிகர்கள் இந்திய ரசிகர்களால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2023-ல் புனேயில் நடந்த இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் போது, ‘டைகர் ஷோயப்’ என்று அழைக்கப்படும் ஷோயப் அலி புகாரி இந்திய ரசிகர்களால் குறிவைக்கப்பட்டார். அவரது புலி சின்னமும் கிழிந்தது.
கான்பூர் டெஸ்டுக்கு முன்னதாக, வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான “அட்டூழியங்களுக்கு” எதிரான ஆட்டத்தின் போது இந்து மகாசபா போராட்டம் நடத்தப்போவதாக அச்சுறுத்தியதை அடுத்து, மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
“வங்காளதேசத்தின் நிலைமை குறித்து காவல்துறை எச்சரிக்கையாக உள்ளது. போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தகவல்களை எடுத்து வருகிறோம். யாராவது போராட்டம் நடத்த முயன்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கான்பூர் போலீஸ் கமிஷனர் ஹரிஷ் சந்தர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“