worldcup 2023 | afghanistan | bangladesh: இந்தியாவில் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, தர்மசாலாவில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய 3-வது லீக்கில் ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் சாஹிப் அல் ஹசன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமாடிய இப்ராஹிம் சத்ரான் 22 ரன்னிலும், ரஹ்மத் ஷா 18 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 47 ரன்கள் எடுத்தார். முன்னணி ஆல்ரவுண்டரான ரஷித் கான் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கான் அணி 156 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் வங்கதேசத்துக்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச அணியில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 157 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய தன்சித் ஹசன் 5 ரன்னுடன் ரன்-அவுட் ஆகிய வெளியேறினார். 2 பவுண்டரிகளை விரட்டிய லிட்டன் தாஸ் 13 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ - மெஹிதி ஹசன் மிராஸ் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியில் அரைசதம் விளாசிய ஹசன் மிராஸ் 57 ரன்னில் அவுட் ஆனார்.
கடைசி வரை களத்தில் இருந்த ஹொசைன் சாண்டோ வங்கதேச அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 83 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸரை பறக்கவிட்டு 59 ரன்கள் சேர்த்தார். 4 விக்கெட்டை மட்டும் இழந்த வங்கதேச அணி 34.4 வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது. இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
ஆப்கானிஸ்தான்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபுருக்ஹல்ஹாக்.
வங்கதேசம்:
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மெஹிதி ஹசன் மிராஸ், ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்
இந்த ஆட்டத்தை தொடர்ந்து டெல்லியில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் 4-வது லீக்கில் இலங்கை-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“