Advertisment

BAN vs SL: ஷாண்டோ, ஷகிப் அல்ஹசன் அபாரம்... இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையேயான போட்டி டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Bangladesh vs Sri Lanka Live Score updates World Cup 2023 New Delhi in tamil

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதல்

 Bangladesh Vs Srilanka | Worldcup 2023: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் வங்கதேசம்  - இலங்கை அணிகள் மோதியது.   

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Bangladesh vs Sri Lanka Live Score, World Cup 2023

டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங்; இலங்கை முதலில் பேட்டிங்

டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணியில் பதும் நிஸ்ஸங்க - குசல் பெரேரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் ஒரு பவுண்டரியை விரட்டிய குசல் பெரேரா 5 ரன்னில் அவுட் ஆனார். 

10 ஓவர்கள் தாக்குப் பிடித்த பதும் நிஸ்ஸங்க - கேப்டன் குசல் மெண்டிஸ் ஜோடியில் கேப்டன் குசல் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தொடக்க வீரர் பதும் நிஸ்ஸங்க 8 பவுண்டரிகளுடன் 41 ரன்னில் அவுட் ஆனார். அவருடன் ஜோடி அமைத்த சதீர சமரவிக்ரம 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

சமரவிக்ரம-வின் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்க வேண்டிய ஏஞ்சலோ மேத்யூஸ் களத்திற்குள் வர கால தாமதம் ஆனது. இதனால், வங்கதேச அணியினர் அம்பயரிடம் அப்பீல் செய்தனர். இதனிடையே, களத்திற்குள் வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் கால தாமதம் ஏன் என்பதை கள நடுவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில், வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தனது அப்பீலை திரும்ப பெற மறுத்துவிட்டார். இதனால், கால தாமதமாக பேட்டிங் செய்ய களத்திற்குள் வந்த ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட் என அம்பயர் அறிவித்தார். 

ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்யாமலே பூஜ்ஜிய ரன்னுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஒருவேளை வங்கதேச அணியினர் தங்களது அப்பீலை வாபஸ் பெற்று இருந்தால் அவர் பேட்டிங் செய்திருக்கலாம்.

இந்த அதிருப்திகரமான சம்பவத்துக்குப் பின் களத்தில் இருந்த சரித் அசலங்கா உடன்  தனஞ்சய டி சில்வா ஜோடி சேர்ந்தார். 12 ஓவர்களுக்கு மேல் தாக்குப் பிடித்த இந்த ஜோடியில் 56 பந்துகளில் சரித் அசலங்கா அரைசதம் விளாசினார். அவருடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்த தனஞ்சய டி சில்வா 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா 105 பந்துகளில் 108 ரன் எடுத்து ஷகிப் அல் ஹசன் பந்தில் லிட்டன் தாஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இலங்கை அணியில் அதன் பிறகு வந்த  பேட்ஸ்மேன்கள் யாரும் சோபிக்கவில்லை. இதனால், இலங்கை அணியின் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து வெளியேறினர். இதனால், இலங்கை அணி 49.3 ஓவரில், 279 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

வங்கதேச அணி தரப்பில் பந்துவீச்சில் தான்ஸிம் ஹசன் ஷகிப் 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹாசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மெஹிதி ஹாசன் 1 விக்கெட் எடுத்தார். 

இதன் மூலம், வங்கதேச அணி 280 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், தான்ஸித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் பேட்டிங் செய்ய வந்தனர்.

தான்ஸித் ஹாசன் 9 ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தில்ஷன் மதுஷங்கா பந்தில் பாதும் நிஸ்ஸங்கா இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ பேட்டிங் செய்ய வந்தார். 

வங்கதேசம் அணி 6.2 ஒவரில் 41 ரன் எடுத்திருந்தபோது, நன்றாக விளையாடிய லிட்டன் தாஸ் 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது, தில்ஷன் மதுஷங்கா பந்தில்  எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து, ஷகிப் அல் ஹாசன் பேட்டிங் செய்ய வந்தார்.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ மற்றும் ஷகிப் அல் ஹாசன் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினார்கள். நன்றாக விளையாடிய நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 58 பந்துகளில் 52 ரன் எடுத்து அரைசதம் அடித்தார். 

மறுமுனையில், நிதானமாக விளையாடிய ஷகிப் அல் ஹசனும் அரைசதம் அடித்தார். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ - ஷகிப் அல் ஹசன் ஜோடி அரை சதம் அடித்து நிதானமாக விளையாடினார்கள். 

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, 101 பந்துகளுக்கு 90 எடுத்திருந்தபோது, ஏஞ்சலோ மேத்யூஸ் வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்து மஹ்மதுல்லா பேட்டிங் செய்ய வந்தார்.

அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹாசனாவது சதம் அடிப்பார் என்று வங்கதேச ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், அவரும் 65 பந்துகளில் 82 ரன் எடுத்திருந்தபோது, ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் சரித் அசலங்காவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, முஷ்ஃபிகர் ரஹிம் பேட்டிங் செய்ய வந்தார்.

முஷ்ஃபிகர் ரஹ்மி 10 ரன்கள் எடுத்திருந்தபோது, தில்ஷன் மதுச்ஷங்கா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். இவரை அடுத்து, டோவிட் ஹிரிதோய் பேட்டிங் செய்ய வந்தார்.

பொறுப்புடன் விளையாடிய மஹ்மதுல்லா 23 பந்துகளில் 22 ரன் எடுத்திருந்த நிலையில், தீக்‌ஷனா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து மெஹிதி ஹசன் பேட்டிங் செய்ய வந்தார். 

மெஹிதி ஹசன் 3 ரன் எடுத்திருந்த நிலையில் தீக்‌ஷனா பந்தில் சரித் அசலங்காவிடம் கெட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, தான்ஸிம் ஹசன் சகிப் பேட்டிங் செய்ய வந்தார். அடித்து விளையாடிய தான்ஸிம் ஹசன் சகிப் வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் வங்கதேச அணி 41.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

 இரு அணிகளின் பிளேயிங் லெவன்: 

இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, கசுன் ராஜித, தில்ஷான் மதுஷங்க. 

வங்கதேசம்: தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம்

இன்றைய ஆட்டத்தில் மோதும் இலங்கை, வங்காளதேசம் அணிகள் ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டன. இன்றைய போட்டியின் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆனால், 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் டாப்-8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும். அதனால், இன்றைய போட்டி  முக்கியத்துவம் பெறுகிறது. சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்ப இரு அணிகளும் போராடும் என்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Bangladesh Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment