Ex-Pakistan cricketer Basit Ali - Rahul Dravid Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடி இந்தியா 296 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது.
பின்னர், 173 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் சேர்த்து 296 ரன்கள் முன்னிலையில் உள்ளது. லபுசேசன் 41 ரன்களுடனும், கிரீன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் அலி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய பாசித் அலி, ‘அஜிங்க்யா ரஹானே, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜாவைத் தவிர, மற்ற இந்திய அணி வீரர்கள் சோர்வாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“நான் ராகுல் டிராவிட்டின் மிகப்பெரிய ரசிகன். எப்போதும் அப்படிதான் இருந்திருக்கிறேன், இனியும் இருப்பேன். அவர் ஒரு கிளாஸ் பிளேயர், ஒரு ஜாம்பவான். ஆனால் ஒரு பயிற்சியாளராக, அவர் முற்றிலும் பூஜ்ஜியமாக இருக்கிறார்.
இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள், நீங்கள் இந்தியாவில் சுழலுக்கு உதவும் ஆடுகளங்களைத் தயார் செய்தீர்கள். இந்தியா ஆஸ்திரேலியாவுக்குச் சென்றபோது, இதே போன்ற விக்கெட்டுகள் இருந்தனவா? அவர்களிடம் பவுன்சி பிட்ச்கள் இருந்தன, அல்லவா?. அவர் என்ன நினைக்கிறார் என்பது கடவுளுக்குத் தெரியும். கடவுள் மூளையை பகிரும் போது அவர் எங்கிருந்தார் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.
முதல் இரண்டு மணி நேரம் கவலையுடன் பந்துவீசத் தேர்ந்தெடுத்த தருணத்தில் இந்தியா தோல்வியடைந்தது. மேலும் இந்தியாவின் பந்துவீச்சு ஐ.பி.எல் போலவே இருந்தது.
மதிய உணவின் போது, இந்திய பந்துவீச்சாளர்கள் போட்டியை வென்றது போல் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தியா இப்போது செய்யக்கூடியது, ஆஸ்திரேலிய அணியை சொற்ப ரன்னில் வெளியேற்றி, 4வது நாளில் அதிசயத்தை எதிர்பார்க்கலாம்.
இந்தியா களமிறங்கி விளையாடிய 120 ஓவர்களில், ரஹானே, கோலி மற்றும் ஜடேஜா ஆகிய 2-3 வீரர்கள் மட்டுமே உடற்தகுதியுடன் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. மீதமுள்ளவர்கள் சோர்வாக காணப்பட்டனர்." என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.