'பாகிஸ்தானை உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்ற முடியாது'! - பிசிசிஐ விளக்கமும், ரசிகர்களின் எதிர்ப்பும்

எந்த தேசமும் இதற்கு ஒப்புக் கொண்டு நமக்கு ஆதரவாக வாக்களிக்காது

உலகக் கோப்பைத் தொடரில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றச் சொல்லி, நாங்கள் ஐசிசியிடம் எந்த அறிக்கையும் அனுப்பவும் இல்லை, அனுப்பப் போவதும் இல்லை. அப்படியே அனுப்பினாலும் அதனை ஐசிசி நிராகரித்துவிடும் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு கடந்த பிப்.14ம் தேதி மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினான். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பாகிஸ்தானில் இயங்கி வருவதால், தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், வரும் மே மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று பரவலாக எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தற்போதைய வீரர்கள் சாஹல் மற்றும் முகமது ஷமி ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தச் சூழ்நிலையில், பிசிசிஐ குறித்து இன்று காலை முதல் தகவல் ஒன்று பரவியது. அதில், ‘நாம் ஏன் உலகக் கோப்பையை புறக்கணிக்க வேண்டும்?. ஐசிசியிடம் முறையிட்டு பாகிஸ்தானை வெளியேற்றச் சொல்வோம்’ என்று பிசிசிஐ சொன்னதாகவும், அதுகுறித்து மிக விரைவில் ஐசிசிக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

ட்விட்டர் பயன்படுத்தும், விளையாட்டைச் சார்ந்த சில முக்கிய பிரபலங்களும் இந்தச் செய்தியை தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களில் இச்செய்தியை ட்வீட் செய்திருந்தனர். இதனால், இவ்விவகாரம் வைரல் ஆனது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு, பிசிசிஐ தரப்பில் அளித்த பதிலில், அவர்கள் அதனை முற்றிலும் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “உலகக் கோப்பைத் தொடரில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்றச் சொல்லி, நாங்கள் ஐசிசிக்கு எந்த அறிக்கையும் அனுப்பவும் இல்லை, அனுப்பப் போவதும் இல்லை. அப்படியே அனுப்பினாலும் அதனை ஐசிசி நிராகரித்துவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஐசிசி சட்ட திட்டத்தின் படியும், ஒப்பந்த விதியின் படியும் நாம் இவ்வாறு வெளியேற்ற சொல்லிக் கேட்க முடியாது. ஐசிசி விதிமுறையின் படி, எந்த ஒரு அணியும் தகுதியிழப்பு செய்யப்படாத வரை அவர்கள் தொடர்ந்து விளையாடுவதை தடுக்க முடியாது. அதையும் மீறி நாம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்து ஐசிசியிடம் கொடுத்தால், அவர்கள் மற்ற அணிகளின் முன்பு அதனை வாக்கெடுப்பிற்கு விடுவார்கள். அப்போதும், எந்த தேசமும் இதற்கு ஒப்புக் கொண்டு நமக்கு ஆதரவாக வாக்களிக்காது. நாம் தான் தோற்றுப் போவோம். தவிர, 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரையும், 2023 உலகக் கோப்பைத் தொடரையும் நம்மால் நடத்த முடியாமல் போகும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ-யின் இந்த விளக்கத்தை பலரும் சமூக தளங்களில் விமர்சித்து வருகின்றனர். ‘பணம் கொழிக்கும் அமைப்பு பிசிசிஐ’ என்றும், ‘பணத்திற்காக எதையும் விட்டுக் கொடுப்பீர்களா?’ என்ற ரீதியில் பலரும் பிசிசிஐ விமர்சித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close