9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நாளை புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
புதன்கிழமை கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். இந்த நிலையில், இந்தத் தொடரின் போது, இந்திய அணி வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வர இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்டர்-கவாஸ்கர் டிராபி தோல்விக்குப் பிறகு, இந்திய அணி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதன் காரணமாக பி.சி.சி.ஐ., இந்திய அணியின் வீரர்கள் மீது பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி இந்திய வீரர்களுக்கு 10 புதிய விதிகளை அமல்படுத்தியது. இதில் முக்கிய விதியாக, இந்திய வீரர்கள் யாரும் முறையான அனுமதியின்றி பெரிய தொடர்களை தவிர்த்து மற்ற எவ்வித தொடர்களுக்கும் தங்களது மனைவியையோ, குழந்தைகளையோ, உறவினர்களையோ அழைத்துச் செல்லக்கூடாது என்றும், குறைந்தபட்சம் 14 நாட்களில் இருந்து, அதிகபட்சம் 45 நாட்கள் வரை கொண்ட எந்த தொடர்களுக்கும் பி.சி.சி.ஐ-யின் முறையான அனுமதி பெற்றே இனி குடும்பத்தாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வர பி.சி.சி.ஐ அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அனுமதி ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் தான் என்று கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வீரர்கள் தங்களுக்குள் விவாதித்து பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைக்கலாம் என்றும், அதன்பிறகு அதற்கான ஏற்பாடுகளை வாரியம் செய்யும் எனவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த அனுமதி எந்த ஒரு போட்டிக்கு என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.
இந்திய வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து வர பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ள அதேவேளையில், "பயணங்கள் மற்றும் தொடர்களின் போது தொழில்முறை தரம் மற்றும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்ய விரும்புகிறது. ஏதேனும் விதிவிலக்குகள் அல்லது விலகல்கள் தேர்வுக் குழுவின் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளரால் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட வேண்டும். இணங்கத் தவறினால் பி.சி.சி.ஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்.
மேலும், பி.சி.சி.ஐ பிளேயர் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியன் பிரீமியர் லீக் நடத்தும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்பதில் இருந்து சம்பந்தப்பட்ட வீரருக்கு எதிரான அனுமதியை உள்ளடக்கிய ஒரு வீரருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பி.சி.சி.ஐ-க்கு உரிமை உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.