Indian Cricket Team: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்றுக்கு நகர்ந்துள்ள நிலையில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை இன்று (வியாழக்கிழமை) இரவு நடக்கும் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.
இந்திய அணி இடம் பெற்றுள்ள குரூப் 1ல், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு எதிரான 3 போட்டியில் 2ல் வென்றால் கூட இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறலாம். தற்போதைய நிலவரப்படி, அதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. அரைஇறுதிக்கு முன்னேறினால் இறுதிப் போட்டிக்கும் இந்தியா நுழையும் வாய்ப்பு கிடைக்கும். அதில் வென்று கோப்பையை சாம்பியன் பட்டத்தை வென்றால், 10 ஆண்டுகளாக ஐ.சி.சி கோப்பைக்கான இந்தியாவின் தேடல் முடிவுக்கு வரும்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What’s next for India after T20 World Cup: BCCI announce dates, venues for Bangladesh, New Zealand and England home series
ஒருநாள் உலகக் கோப்பையை தவற விட்ட இந்தியா பெருமிதம் அடையும். அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா, கோலி போன்ற முன்னணி வீரர்களின் கோப்பை கனவு நனவாகும். பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டும் நிம்மதி பெருமூச்சுடன் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவார். அப்போது, அவர் ஏந்தி வரும் தீ பந்தத்தை புதிய தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருக்கும் கவுதம் கம்பீர் வாங்கிக் கொள்ள தயாராக இருப்பார்.
கவுதம் கம்பீர் கட்டமைக்கவிருக்கும் இந்திய அணி அடுத்ததாக 2 டி20 மற்றும் 3 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜிம்பாப்வேயில் தான் நடைபெற உள்ளது. இதேபோல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேற உள்ளது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி முதலில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்தப் போட்டிகள் ஜூலை 06 தொடங்கி ஜூலை 14 வரையில் ஒரே ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்க உள்ளது.
இதனை முடித்து விட்டு தாயகம் திரும்பும் இந்திய அணி, 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியுடன் மோதுகிறது. செப்டம்பர் 19 முதல் 23 வரை நடைபெற உள்ள முதலாவது டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அரங்கேற உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 01 வரை கான்பூரில் நடக்க உள்ளது.
இதனைத் தொடர்ந்து, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி அக்டோபர் 06, ஞாயிற்றுக்கிழமை அன்று தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. 2வது போட்டி அக்டோபர் 09, புதன்கிழமை அன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியதில் நடக்கும். 3-வது போட்டி அக்டோபர் 12, சனிக்கிழமை அன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடரைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்கும். இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16 முதல் 20 வரை பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும். 2வது போட்டி அக்டோபர் 24 முதல் 28 வரை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கும். 3வது போட்டி நவம்பர் 01 முதல் 05 வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும்.
இதன்பின்னர், இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்லும். இதில் முதல் போட்டி நவம்பர் 22 முதல் 26 வரை பெர்த் நகரிலும், 2வது போட்டி டிசம்பர் 06 முதல் 10 வரை அடிலெய்டு நகரிலும், 3வது போட்டி டிசம்பர் 14 முதல் 18 வரை பிரிஸ்பேன் நகரிலும் நடக்க உள்ளது. தொடர்ந்து, பாக்ஸ்சிங் டே டெஸ்ட் போட்டியாக 4வது போட்டி டிசம்பர் 26 முதல் 30 வரை மெல்போர்ன் நகரிலும், 5-வது போட்டி ஜனவரி 03 முதல் 7வரை சிட்னி நகரிலும் நடக்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“